மது விற்பனையில் கட்டுப்பாடுகள்: அரசுக்கு தேமுதிக யோசனை

மது விற்பனையில் கட்டுப்பாடுகள்: அரசுக்கு தேமுதிக யோசனை
Updated on
3 min read

மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக யோசனை தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைமை செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை - கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

கலாமுக்கு இரங்கல்

* முன்னாள் குடியசுத் தலைவர் அப்துல் கலாம், காந்தியவாதி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

* தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி, கலாமின் இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்காமல் தமிழகத்துக்கு அவமரியாதையையும், தமிழர்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்திவிட்டார். இதற்கு உரிய விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும்.

மதுவிலக்கு போராட்டம்

* மதுவால் ஏற்படும் கொடுமைகள் மற்றும் குடும்பங்கள் சீரழிவது பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதிமுக அரசு மது விற்பனை செய்வதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழகத்தில் மூன்று தலைமுறை மதுவால் கெட்டு குட்டிச்சுவராகியுள்ளது.

முழு மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் என்கின்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிடவேண்டும்.

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று அந்த அறிவிப்பை நடைமுறைபடுத்தி, மக்கள் மத்தியில் தானும் மதுவிற்கு எதிரானவர் என்று நிரூபிக்கவேண்டும். அதுவே பூரண மதுவிலக்கை வலியுறுத்திய அனைவரின் போராட்டத்திற்கும், காந்தியவாதி சசிபெருமாளின் உயிரிழப்பிற்கும் அதிமுக அரசு செலுத்தும் மரியாதையாகும். இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

* தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ஜனநாயக முறைப்படி அகிம்சைவழி போராட்டமான, மனிதசங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்டனம். பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல், சாலையோரத்தில் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தேமுதிக தொண்டர்கள் மீது, காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதையும், கழகத் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழகம் முழுவதும் கைது செய்த அதிமுக அரசின் கைப்பாவையான காவல்துறையை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கரும்பு விவசாயிகள் பிரச்சினை

* தற்போது 2015 - 2016 நிதியாண்டில் வெட்டப்படும் கரும்புக்கு, டன் ஒன்றுக்கு ரூபாய் 1700 மட்டுமே வழங்கப்படுமென தனியார் சர்க்கரை ஆலைகள் கூறிவருவதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500 வழங்கவேண்டுமென தமிழக அரசை கேட்டுகொள்கிறது.

வேளாண் பிரச்சினைகள்:

* டெல்டா விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணையை திறந்துவிடாததால் குறுவைசாகுபடி செய்யமுடியவில்லை. தற்போது அணையை திறந்துவிட தேதியை அறிவித்தபின்பும், கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வதற்கான கால்வாய்கள், செடி கொடிகளாலும், சேறு சகதிகளாலும், தூர்ந்துபோய் தூர்வாரப்படாமல், மதகுகளின் பழுது நீக்கப்படாமல் உள்ளன.

அடிப்படை பணிகளை செய்யாமல் தண்ணீர் திறப்பதை, டெல்டா விவசாயிகளை ஏமாற்றும் செயலாக கருதுவதோடு, இச்செயற்குழு இதைவன்மையாக கண்டிப்பதுடன், போர்க்கால அடிப்படையில் அப்பணிகளை நிறைவேற்ற வேண்டுமென அதிமுக அரசை வலியுறுத்துகிறது.

* டெல்டா மாவட்டமான திருவாரூரில், விவசாய பூமியில் மீத்தேன் வாயு எடுக்கும் சோதனை முயற்சியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளதை நிரந்தரமாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

'மோட்டார் வாகன சட்டம்' தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களின் உரிமையை பாதிப்பதாகவும் இருப்பதாக கூறப்படுவதால், இச்சட்ட மசோதாவை அனைத்து தரப்புமக்களின் கருத்தறிந்து நிறைவேற்ற வேண்டும்.

* வெற்று அறிவிப்புகளை வெளியிடாமல், தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை உண்மையாகவே தீர்க்கும் வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* தனி நபர்களால் நடத்தப்படும் குவாரிகளை மீட்டு, தமிழக அரசே நடத்த வேண்டும்.

சட்டமன்றத்தைக் கூட்டுக:

* தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரை சுமார் ஒருவருட காலம் இடைநீக்கம் செய்து, மற்றவர்களை கூட்டத்தொடர் முழுவதும் வெளியேற்றியதை ரத்துசெய்ய வேண்டும். சுமார் ஆறு மாதகாலமாகியும் துறையின் மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக தமிழக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை

* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. இதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை செம்மைபடுத்த வேண்டும்.

* காற்றாலை மின்சாரம் குறைந்த விலைக்கு கிடைத்தும், அதானி நிறுவனத்துடன் சூரியசக்தி மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வழக்கு குறித்த உண்மை நிலவரத்தை தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வெள்ளை அறிக்கையை அதிமுக அரசு வெளியிடவேண்டும். அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

* தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம், 2009ஆம் ஆண்டு சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்டது. அது பயன்பாட்டிற்கு வந்திருந்தால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்திருக்கும். ஆனால், அதிமுக அரசின் ஆணவப்போக்காலும், அலட்சியத்தாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிடிவாதத்தாலும், மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில்வந்து கூறியும், சென்னை உயர் நீதிமன்றம் இத்திட்டத்தை அனுமதித்தும், செயல்படுத்தாமல் முடக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல திட்டங்களை தடுத்து நிறுத்தியுள்ள அதிமுக அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக அத்திட்டங்களை செயல்படுத்தவேண்டுமென வலியுறுத்துகிறது.

* தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக உள்ளதை அதிமுக அரசு எப்படி சமாளிக்கப் போகிறதென்று, தமிழக மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in