Last Updated : 27 Dec, 2019 06:05 PM

 

Published : 27 Dec 2019 06:05 PM
Last Updated : 27 Dec 2019 06:05 PM

உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம்: மதுரையில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மனைவிக்காக சாவி மாலை அணிந்துவந்த கணவர்

மதுரை மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மனைவிக்காக சாவி மாலை அணிந்துவந்த கணவர், தனது மனைவிக்காக ஏணி மாதிரியை தலைப்பாகைக்குள் சொருகிவந்து வாக்கு சேகரித்த கணவர் என சுவாரஸ்யங்கள் பல இருந்தன.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 181 பேர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 1555 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு 2467 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 8,169 பேரும் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சமயநல்லூர், திருவேடகம், முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் காலை முதலே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது.

மன்னாடிமங்கலம்

பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். கிராமங்களில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மன்னாடிமங்கலம் வாக்குச் சாவடியிலுள்ள அனைத்து பூத்களிலும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். ஒருவருக்கு ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் களுக்கென வழங்கிய தனித்தனி வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஓட்டை பதிவு செய்தபின்னர் வாக்குச் சீட்டுகளை ஒரே பெட்டியில் போட்டனர்.

சாவி மாலை..

சோழவந்தான் தேனூரில் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டரில் தூரத்தில் அதிமுக, திமுக மற்றும் பிற கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி அல்லாத பதவிக்கு போட்டியிடுவோருக்கு ஆதரவாளர்கள் வரிசையாக நின்று வாக்கு சேகரித்தனர்.

தேனூரில் உள்ள 9- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் செல்வியின் கணவர் ஊர்காவலன் தனது மனைவிக்கு ஒதுக்கிய சாவி சின்னத்தை மாலையாக தயாரித்து, அணிந்துகொண்டு வாக்குச் சேகரித்தார்.

அதேபோல், ஒத்தக்கடை பகுதியில் மற்றுமொருவர் ஏணியின் மாதிரியை வடிவமைத்து அதை தலைப்பாகைக்குள் சொருகிக் கொண்டு தனது மனைவிக்காக வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்களுக்கு வாழைப்பழம்..

முள்ளிப்பள்ளத்தில் வாக்களிக்கச் சென்றவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்தனர். மலைகிராமமான விராலிப்பட்டியில் வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் தவிர, பிறர் வருவதைத் தடுக்க, குறிப்பிட்ட தூரத்தில் இரு சக்கர வாகனங்கள், மரங்களை கட்டி தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.

அனைத்து பூத்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ மூன்று சக்கர நாற்காலிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. சக்கர நாற்காலிகளை இயக்க நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்தனர்.

கிடாரிபட்டி, மேலவளவு உட்பட சில இடங்களில் வாக்களிக்க சென்றவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தனம், குங்குமம், பெண்களுக்கு பூ மற்றும் வெற்றி லைபாக்கும் வழங்கினர்.

வெறிச்சோடிய பூத்கள்:

வாடிப்பட்டி ஒன்றியம் மேலசிண்ணணம்பட்டி, 15, பி மேட்டுப்பட்டி உள்ளிட்ட ஒருசில பூத்துக் களில் மதியத்துக்கு மேல் ஆட்கள் இன்றி, வெறிச்சோடின. குறைந்தளவு வாக்குக்காளர்களை கொண்ட கிராமங்களில் காலையில் இருந்த விறுவிறுப்பான வாக்குப்பதிவு, மாலையில் இல்லை.

இது போன்ற வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் மட்டுமே இருந்தனர். கிடாரிபட்டியிலுள்ள 9வது வார்டில் 25க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் பெயர்கள் பட்டியில் இடம் பெற்றிருப்பதும், இதன்மூலம் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்பதால் விழிப்புடன் இருப்பதாக முகவர்கள் தெரிவித்தனர்.

அமைதியான வாக்குப்பதிவு..

மாவட்டம் முழுவதும் ஒருசில இடங்கள் தவிர, பெரும்பாலான வாக்குச்சாவடிகள், பூத்களில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

மேலவளவு காலனியிலுள்ள வாக்குச் சாவடியில் காலை ஓட்டுப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் சிறு, சிறு பிரச்சினை உருவானதாகவும், பிறகு வேட்பாளர்களுக்குள்ளேயே சமரசம் ஆகிவிட்டனர் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

மாலை 5 மணிக்கு ஒட்டுப்பதிவு நேரம் முடிந்தவுடன், பதிவான ஓட்டுக்கள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. போலீஸ் வாகனங்கள் மூலம் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

முதற்கட்ட வாக்குப்பதிவுக்கென சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடிக்கு உள்ளே, வெளியே, 100 மீட்டர் தூரம் என, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் மற்றும் கூடுதல் எஸ்பிக்கள் கணேசன், வனிதா ஆகியோர் மாவட்டம் முழுவதும் ரோந்து வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x