Published : 27 Dec 2019 03:35 PM
Last Updated : 27 Dec 2019 03:35 PM

மாநகராட்சி, நகராட்சி  தேர்தலுக்கு பின்னரே வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கவேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித்தேர்தல் இந்த மாதம் 27(இன்று) மற்றும் 30 தேதிகளில் நடக்கிறது. இதில் மாநகராட்சி, நகராட்சி, 9 மாவட்டங்கள் நீங்களாக பிற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கு பலரும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிந்து ஜனவரி-2 அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மற்ற பகுதிகளுக்கு தேர்தல் நடத்தாமல் ஒரு பகுதியில் நடந்த தேர்தல் முடிவை வெளியிடுவதுகுறித்து பலரும் ஆட்சேபித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த இயக்கத்தின் பொது செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில், “1996 முதல் 2001 வரை நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல்களில் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டன என்பதால், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

ஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், பஞ்சாயத்து வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவில் அந்த முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தபட்ட தேர்தல் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆணையம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என விளக்கமளித்துள்ளது. ஆகவே இரண்டு முடிவுகளையும் ஒன்றாக சேர்த்து முடிவுகளை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் பல கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டாலும், எண்ணிக்கை ஒரே நாளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுவதுபோன்று இதையும் அறிவிக்கவேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு டிசம்பர் 30-ல் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x