Published : 27 Dec 2019 03:02 PM
Last Updated : 27 Dec 2019 03:02 PM

ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு; பாஜக அரசின் விளம்பரத் தூதராக செயல்படுகிறாரா? - முத்தரசன் கண்டனம்

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மத்திய பாஜக அரசின் விளம்பரத் தூதராக செயல்பட்டு வருகிறாரா என, சந்தேகம் எழுவதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (டிச.27) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசியல் நிகழ்வுகளிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் பல நெருக்கடிகள், திருகுமுருகல்கள், திருப்பங்கள் ஏற்பட்ட காலங்களிலும், அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பை, எல்லை மீறல்களை தடுக்க யுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் இந்திய ராணுவம் தனது கடமைப் பொறுப்புகளை மிகக் கட்டுப்பாடாக மேற்கொண்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின் படி அதன் அதிகார எல்லைகளை மீறியதில்லை. ஆனால் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் மத்திய பாஜக அரசின் விளம்பரத் தூதராக செயல்பட்டு வருகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரு தலைமை செயல் அதிகாரியை நியமித்துக் கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதும், அந்தப் பொறுப்பில் ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்படாலம் என்ற செய்தியும் இந்திய ராணுவம் மதவாத அரசியல் மயப்படுத்தப்படுகிறதோ என்ற ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள் குறித்து அவர் முன்பே பகிரங்கமாக விமர்சித்தார். தொடர்ந்து வங்கதேசம் சென்ற போது அசாம் மாநிலத்தில் குடியேறியுள்ளோர் பிரச்சினை குறித்துப் பேசினார்.

இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்களை எதிர்கட்சிகளின் பொறுப்பற்ற செயல், எதிர்கட்சி தலைவர்கள் தலைமை பண்பு இல்லாதவர்கள், நாட்டை தவறாக வழி நடத்துபவர்கள் என குற்றம்சாட்டி பேசத் தொடங்கியுள்ளார். இப்படி ராணுவ ஜெனரல் அத்துமீறி பேசுவதும், இதனை மத்திய அரசும், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் போன்றோர் வாய் திறந்து கண்டிக்காமல் மவுன சாட்சியாக இருப்பதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்தி, சிதைத்து வருவதன் தொடர்ச்சியாக, தற்போது ராணுவத்தை மதவாத அரசியல் மயப்படுத்தும் பொறுப்பு ஜெனரல் பிபின் ராவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ராணுவ ஜெனரல் ராவத்தின் அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. ஜெனரல் பிபின் ராவத் போன்ற பொறுப்பற்ற ராணுவ அதிகாரிகள் அரசியல் சாசனம் சார்ந்த, குடிமைப் பொறுப்புகளில் மத்திய அரசு நியமிக்கக் கூடாது" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x