Published : 04 Aug 2015 03:32 PM
Last Updated : 04 Aug 2015 03:32 PM

வாடகை டாக்ஸியில் ஏறிச் செல்லும் பயணிகளிடம் அதிரடி கட்டண வசூல்: கோவை ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் தொடரும் கெடுபிடி

கோவை ரயில் நிலையத்துக்கு வாடகை டாக்ஸியில் வந்து செல்லும் பயணிகளிடம் கார் பார்க்கிங் கட்டணம், ஒப்பந்ததாரர் சார்பில் வலுக்கட்டாயமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் தொழில் செய்து வரும் ஜாபர், ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பகுதியில் தொடர்பு கொண்டு கூறியதாவது: கடந்த 2-ம் தேதி, மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயிலில் கோவை ரயில் நிலையத்துக்கு குடும்பத்துடன் வந்தோம். குனியமுத்தூர் செல்ல ரயிலில் வரும்போதே வாடகைக்கு டாக்ஸி ஒன்றை பதிவு செய்தோம்.

ரயிலை விட்டு கீழே இறங்கி, ரயில் நிலைய கூட்ஸ்செட் சாலைப் பகுதியில் உள்ள மேற்கு நுழைவு வழிப்பாதையில் வெளியேறி அங்கு வந்த டாக்ஸியில் ஏறி புறப்பட முயன்றபோது, கார் பார்க்கிங் ஊழியர்கள் பயணிகளான எங்களிடம் கட்டணம் ரூ.20 செலுத்துமாறு கூறினர். வளாகத்தில் காரைப் பார்க் செய்யாத நிலையில் உடனடியாக வந்து அழைத்துச் செல்லும் டாக்ஸிக்காக நாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்.

அப்படியே கட்டணம் வசூலிப்பதாக இருந்தாலும் பயணிகளிடம் எவ்வாறு நீங்கள் வசூலிக்கலாம் என கேள்வி எழுப்பினோம். நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக அவர்கள் பதில் கூறாமல், ஊழியர்கள் 5-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக கூடி நின்று கட்டணம் செலுத்துவதாக இருந்தால் இங்கிருந்து டாக்ஸியில் ஏறிச் செல்லுங்கள். இல்லையென்றால், வெளியே நடந்து சென்று அங்கிருந்து டாக்ஸியில் ஏறிச் செல்லுங்கள் என மிரட்டினர்.

இதையடுத்து, டாக்ஸியில் இருந்து கீழே இறங்கி நடந்து வெளியே வந்து, பின்னர் டாக்ஸியில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் நிறுத்தும் வாகனங்களுக்கு மட்டும்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், அங்குள்ள ஒப்பந்ததாரர்கள், அதை மீறி பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கின்றனர்.

இதனால், கால் டாக்ஸியை பயன்படுத்த விரும்பும் வயதான பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவர்கள் கேட்கும் கட்டணம் ரூ. 20-ஐ செலுத்திய பின்னர், டாக்ஸியை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ரயில்வே நிர்வாகம், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ரயில் நிலைய மேலாளர் சின்னராஜூ கூறும்போது, ‘அவ்வாறு கட்டணம் வசூலிப்பது தவறு.

கார் பார்க்கிங் ஒப்பந்ததாரர்கள் அவ்வாறு வசூலித்தால் என்னைச் சந்தித்து புகார் எழுதிக் கொடுத்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், எங்களிடம் நேரிடையாக யாரும் அவ்வாறு புகார் தெரிவிப்பது இல்லை. எந்த புகாரும் வராமல் நாங்கள் கண்காணிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது’ என்றார்.



கோவை ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் ரயில்வே ஊழியர்களுக்கான இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த வைத்து கார் பார்க்கிங்கை குத்தகைக்கு எடுத்து இருக்கும் ஒப்பந்ததாரர் சார்பில் முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஏற்கெனவே ‘தி இந்து’ தமிழில் செய்திகள் தொடர்ச்சியாக பதிவிடப்பட்டுள்ளன.

இருப்பினும், அந்த நிலை இதுவரையிலும் ‘சிலரின்’ ஒத்துழைப்புடன் தொடர்வதாக ரயில்வே ஊழியர்களே புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கால்டாக்ஸியைப் பயன்படுத்தும் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x