

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமோகூரில் வேட்பாளர்கள் இடையே யார் முதலில் வாக்களிப்பது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிங்களில் உள்ள 1,407 பதவிகளுக்கு முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுடன் தொடங்கியது.
இதில், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமோகூரில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே யார் முதலில் வாக்களிப்பது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணாமலை, ராஜேஷ் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. தற்போது அங்கு வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
500 பேர் ஏற்கெனவே தேர்வு:
மதுரையைப் பொறுத்தவரை 11 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 101 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 180 கிராம ஊராட்சித் தலைவர்கள், 1,115 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இன்றைய தேர் தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். இப்பகுதியில் 500 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
மேலவளவு, கீரிப்பட்டி, பாப் பாபட்டி உள்ளிட்ட சில முக்கிய வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் கள்ள ஓட்டுபோட போட முயன்றால் கடும் நட வடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 231 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.