

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில், கண்ணப்பாளையம் ஊராட்சி பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறையின்கீழ் நேற்று வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் உள்ள சுவரொட்டி, பேனர்கள் அகற்றப்பட்டன.
அப்பணியில், ஊராட்சி மன்றதுப்புரவு பணியாளர் யோகலட்சுமி, கண்ணப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி அருகே இருந்த பேனரை அகற்ற முயன்றார். அப்போது அங்கு வந்த அதிமுக கிளை செயலாளர் ஆறுமுகம் (57), யோகலட்சுமியை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சமாதானப்படுத்திய போலீஸாரையும் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற ஊழியர் மஞ்சுளா அளித்த புகாரின் அடிப்படையில், ஆறுமுகம் மீது அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீஸார், நேற்று மாலை ஆறுமுகத்தை கைது செய்தனர்.
ஆறுமுகம் ஏற்கெனவே பேனர் பிரச்சினையில், வருவாய் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.