

தமிழகத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்றுகாலை 7 மணிக்கு தொடங்குகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த 7-ம் தேதிஅறிவிக்கப்பட்டது. கடந்த 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 16-ம்தேதி நிறைவடைந்தது.
இத்தேர்தலில் 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 91,975 பதவிகளுக்கு மொத்தம் 3 லட்சத்து 2,994 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் 3,643 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 48,891 வேட்பாளர்கள் தங்கள்வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். 18,570 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பா ளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதி வேட்பாளர் பட்டியலின்படி 2 லட்சத்து 31,890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 20-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது.
மாநில தேர்தல் ஆணைய வரலாற்றில் முதல்முறையாக இந்த தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமீறலை கண்காணிக்க ஒவ்வொருஒன்றிய அளவில் தலா 3 பறக்கும் படைகளை அமைத்து கண்காணிக்கப்பட்டது. இப்படைகள் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட வெங்காயம், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பொதுமக்களிடம் இருந்து தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை பெற அந்தந்த மாவட்ட அளவில் புகார் மையங்களும் திறக்கப்பட்டன. தேர்தல் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் 25-ம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது.
முதல்கட்ட வாக்குப்பதிவு இன்றுகாலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு அலுவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு நேற்று 3-ம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொண்ட தொகுப்பு ஒப்படைக்கப்பட்டன. அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி ஆணைகளும் நேற்றே வழங்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் நேற்று மாலையே தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று சேர்ந்தனர். மலை கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு பொருட்களை தலைமீது சுமந்துகொண்டு, கால்நடையாகவே அலுவலர்கள் சென்று சேர்ந்தனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 33,920 தாலுகா போலீஸார், 9,959ஆயுதப்படை போலீஸார், 4,700 சிறப்பு காவல்படை போலீஸார் என 48,579 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் முன்னாள்ராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல்படை வீரர்கள் என 14,500 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தத்தில் 63,079 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் காவல்துறை மூலம்அடையாளம் காணப்பட்ட பதட்டமான மற்றும் பிரச்சினைகளுக்குரிய வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் அனைத்து மாவட்டஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.
ஊதியத்துடன் விடுமுறை
ஏற்கெனவே தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டிருந்தது.