

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 1 என அக்கூட்டணி 47 இடங்களில் வென்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த்சோரன் வரும் 29-ம் தேதி பதவியேற்கிறார்.
ராஞ்சியில் விழா
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று தொலைபேசியில் ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுபதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர்களும் கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்கூட்டணி கட்சிகளின் முதல்வர்களும் பதவியேற்றபோது அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவிலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.