

பார்த்தசாரதி கோயிலில் ஜனவரி 6-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்தகோயிலில் பெருமாளை வழிபட்டு உள்ளனர்.
இந்த கோயிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் இன்று தொடங்குகிறது. ஜனவரி 5-ம் தேதியுடன் பகல்பத்து பத்தாம் திருநாள் நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 4 மணிக்கு உள்பிரகார வழிபாடு நடக்கிறது. காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு என்ற பரமபத வாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு 12 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது. இராப்பத்தின் பதினோராவது திருநாளுடன் வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 16-ம் தேதி நிறைவடைகிறது.
பிப்ரவரி 23-ம் தேதி முதல் 29-ம்தேதி வரை தெப்ப உற்சவம்நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.