

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்துமாவில் தயாரான கொழுக்கட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களை அங்கன்வாடி பணியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சத்துமாவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு சில குழந்தைகள் சத்துமாவை விரும்பிஉண்பதில்லை.
எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய சத்துமாவால் செய்யப்பட்ட கொழுக்கட்டையை அங்கன்வாடி மையங்களில் விநியோகம் செய்வது தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஒருகுழந்தைக்கு 100 கிராமில் சத்துமாவில் தயாரான சுவையான 2 கொழுக்கட்டைகள் என்ற ரீதியில் தினமும் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்குவதை அண்மையில் தொடங்கியுள்ளோம்.
மையத்துக்கு வர முடியாதகுழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோர், பணியாளர்களை அணுகினால், அவர்கள் வீடுகளுக்கும் சத்துமாவால் செய்யப்பட்ட கொழுக்கட்டை வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். பணியாளர்களும் பெற்றோரிடம் கொடுத்து அனுப்புகின்றனர். இதன் மூலம், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.