Published : 27 Dec 2019 07:23 AM
Last Updated : 27 Dec 2019 07:23 AM

விவேகானந்தரின் வாழ்க்கையும் செயலும் நிலைத்திருக்கும்: கன்னியாகுமரி விழாவில் குடியரசுத் தலைவர் பெருமிதம்

‘‘சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் செயலும் இந்த பூமியில் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும்’’ என்று கன்னியாகுமரியில் நடைபெற்ற விவேகானந்தர் மண்டப பொன்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள விவேகானந்தா கேந்திராவளாகத்தில் இருக்கும் ஏக்நாத் ரானடே அரங்கில் நேற்று காலைநடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

விவேகானந்தர் உள்அமைதியை தேடி அலைந்தபோது, கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறை மீது அமைந்துள்ள பாரத மாதாவின் பாதச்சுவட்டின் சக்திதான், அவரை இங்கே அழைத்து வந்துள்ளது. 1892-ம்ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி விவேகானந்தர் ஆழ்ந்த தியானத்தை இங்கே தொடங்கினார். 3 பகல், 3 இரவுகளுக்கு தொடர்ந்த இந்ததியானம் ஒரு சாதாரணத் துறவியை, உலகின் பெரும் சக்திவாய்ந்த ஆன்மிகத் தூதராக மாற்றியது.

விவேகானந்தர் தனித்தன்மை யான ஆன்மிக புரட்சியை உலகம் முழுவதும் பரப்பியுள்ளார். இதுவே, இந்தியாவின் ஆன்மிகத்துக்கும், மக்கள் சேவைக்கும் அடித்தளமாக அமைந்தது. கிராமம், கிராமமாக மக்களுக்கு கல்வி வழங்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் தேவையான தொலைநோக்கு பார்வைக்கு வித்திட்டது.

உலகத்தை ஈர்த்த உரை

கன்னியாகுமரியில் ஆன்மிக சக்திபெற்ற பின்னர், 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சிகாகோவில் விவேகானந்தர் ஆற்றிய உரை உலகத்தையே ஈர்த்தது. தான் பின்பற்றும் மதத்தால் பெருமை கொள்வதாகவும், அந்த மதம் சகிப்புத் தன்மையை உலகத்துக்கு போதித்து, உலகமே ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் கடந்த 50 ஆண்டுகளில், ஏராளமான மக்கள், குறிப்பாக இந்திய நாட்டு இளைஞர்களை ஈர்த்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாடு என்பதை வடக்கே இமயமும், தெற்கே விவேகானந்தர் பாறையும்விளக்குகின்றன. இவை இந்தியாவின் சாதாரண மனிதர்களின் அடையாளமாகவும் உள்ளன. விவேகானந்தரின் வாழ்க்கையும், செயலும் இந்த பூமியில் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும். இவ்வாறு குடியரசுத் தலைவர் கூறினார்.

விவேகானந்தர் பொன்விழா புத்தகம், ஏழுமலையான் சிற்ப வடிவ படம் ஆகியவற்றை குடியரசுத் தலைவருக்கு, விவேகானந்தா கேந்திரா துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கேந்திரா பொருளாளர் அனுமந்தராவ் மற்றும் நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவியர் திரளாக கலந்துகொண்டனர்.

பலத்த பாதுகாப்பு

முன்னதாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு விவேகானந்தா கேந்திராவுக்கு குடும்பத்துடன் வந்த குடியரசுத் தலைவர், ராமாயண தரிசன கண்காட்சி கூடத்தை பார்வையிட்டார். அங்குள்ள பாரதமாதா சிலைக்கு மரியாதை செலுத்தினார். காலை 10.10 மணி முதல் 10.30 மணி வரை பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். 10.45 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டுகன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x