

சிறுநீரக ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட 2 பேருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிநவீன அரியவகை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில், பக்கவிளைவுகள் இன்றி அவர்கள் இருவரும் குணமாகியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனை தலைவர் ஆர்.விமலா, ரத்தநாளத் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் உயர் ரத்த அழுத் தத்தால் நீண்ட நாட்களாக அவதிப் பட்டு வந்துள்ளனர். சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இங்கு சேர்க்கப்பட்டனர். சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் 90 சதவீதம் அடைப்பு இருப்பது டாப்ளர், சி.டி. ஆன்ஜியோ ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட வர்களின் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிக்கும். நாளடைவில் 2 சிறுநீரகங்களும் செயலிழக்கும் என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு மருந்து சாப்பிட்டால் எதிர்பாராத பின்விளைவுகளாக சிறுநீரகம், இதயம் செயலிழப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, தொடர்ச்சியான கருச்சிதைவு போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே, பின்விளைவுகள் எதுவும் ஏற்படாத வகையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர கங்களுக்குச் செல்லும் ரத்தக் குழாய் அடைப்பு பிரச்சினை களை சரிசெய்ய ரத்தநாள உள்நோக்கி சிகிச்சை முறை மேற் கொள்ளப்பட்டது. அவர்களது இரு சிறுநீரகங்களின் ரத்தக் குழாய் களிலும் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டது.
மேற்கண்ட நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் இத்தகைய அதிநவீன சிகிச்சையை மேற்கொண்டது இதுவே முதல்முறை. இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்ய ரூ.3 முதல் 4 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.