

சூதாட்ட கிளப் திறப்பது, லாட்டரி கொண்டுவருவதுதான் வளர்ச்சியா என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்திருந்தபோது அவரிடம் முதல்வர் நாராயணசாமி முக்கியக் கோரிக்கைகளை மனுவாகத் தந்தார். அதில் புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து முதல்வருக்கு கிரண்பேடி இன்று (டிச.26) எழுப்பிய கேள்விகளின் விவரம்:
"கேசினோக்களை (சூதாட்ட கிளப்) திறப்பது, மதுபானக் கடைகளைத் திறப்பது, லாட்டரி விற்பனையைத் தொடங்குவது புதுச்சேரியின் வளர்ச்சியா? இதுதான் மக்களின் நலனா? இதுவே ஏழைகளுக்கானது என அழைக்கப்படுகிறதா?
இதுபற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் இதில் எதையும் விரும்பவில்லை.
கருத்து வேறுபாடு ஏற்படும்போது மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தில் உள்ள விதிகளின் கீழ் வருகின்றது.
நாடாளுமன்றம் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தை இயற்றும்போது கொள்கை விஷயங்களில் முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளது. கொள்கை ரீதியிலான விஷயத்தில் அமைச்சரவைக்கும், நிர்வாகிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மத்திய அரசு கொள்கையை முடிவு செய்கின்றது. இதை எவ்வாறு ஜனநாயக விரோதம் என்று சொல்ல முடியும்?"
இவ்வாறு கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.