

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தினால் நேற்றுவரை மைக்செட், ஆட்டோ, டீ, உணவகம், அச்சகம் என்று கிராமத்தில் உள்ள பல்வேறு சிறுதொழில்களும் களைகட்டின. இவற்றால் சிறுதொழிலாளிகள் கணிசமான அளவு சம்பாதிக்க இயன்றதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வரும் 27,30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கிராம நிர்வாகத்தின் ஆணிவேரான ஊரகப்பகுதியில் நடைபெற உள்ள இந்த தேர்தலால் கிராமப் பகுதிகள் வெகுவாய் களைகட்டின.
மனுதாக்கல் முதல் தற்போதைய பிரசாரம் வரை ஆரவாரமாக தங்கள் ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக வார்டுகளில் வலம் வந்தனர்.
மேலும் ஆட்டோக்கள் மூலம் மைக்குகளை கட்டியும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்பகுதியில் உள்ள மைக்செட் தொழிலுக்கு கிராக்கி ஏற்பட்டது. குழாய் ஸ்பீக்கர் இரண்டு, ஆம்ப்ளிபயர், ஒரு வேலையாள் ஆகியவற்றிற்காக தினமும் ரூ.1000 வாடகை பெறப்பட்டது. இதில் உணவு, மது உள்ளிட்ட செலவினம் தனி.
இதே போல் ஆட்டோவிற்கு வாடகையாக மட்டும் ரூ.1000, ஷேர் ஆட்டோக்களுக்கு ரூ.2000-ம் வழங்கப்பட்டது. பெட்ரோல் செலவை வேட்பாளர்களே ஏற்றுக் கொண்டதால் வாடகை கையில் அப்படியே நின்றுள்ளது. 2000 வாட்ஸ் ஜெனரேட்டர் ரூ.500க்கு வாடகைக்கு விடப்பட்டது.
கிராமத்தில் குறைந்த அளவே மைக்செட் தொழில் இருந்ததால் பலரும் போட்டிபோட்டுக் கொண்டு புக்கிங் செய்துள்ளனர்.
தினமும் கூட்டம் கூட்டமாக பிரசாரத்திற்குச் சென்றவர்களால் ஓட்டல், டீ கடை உள்ளிட்டவை களைகட்டின.இதே போல் அச்சகங்கள், கம்ப்யூட்டர் சென்டர்கள் போன்ற தொழில்களும் சுறுசுறுப்பு அடைந்தன.
மொத்தத்தில் தேர்தல் பணப்புழக்கத்தினால் கிராமத்தில் உள்ள பல்வேறு தொழில்கள் களைகட்டின.
இது குறித்து கண்டமனூரைச் சேர்ந்த மைக்செட் உரிமையாளர் கணேசன் கூறுகையில், கிராமங்களில் குறைவான மைக்செட் இருப்பதால் பலரும் தேர்தல் முடியும் வரை புக்கிங் செய்துள்ளனர். வாடகையை தினமும் கொடுத்தால் மற்ற வேட்பாளர்களின் பிரசாரத்திற்குச் சென்றுவிடுவோம் என அஞ்சி பாக்கி வைத்தே பணத்தை செட்டில் செய்கின்றனர். கடந்த சில நாட்களாக நல்ல அளவில் வருமானம் கிடைத்தாலும்கூட மைக்செட், ஒயர்களை முறையாக பயன்படுத்தத் தெரியாததால் அவர் வெகுவாய் பழுதும் ஏற்பட்டு வருகிறது என்றார்.