

முதல்வர் பதவி கனவில் பலரும் கிளம்பிவிட்டனர் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் இல்லத் திருமணவிழா ஆரணியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மணமக்கள் பாபு மற்றும் தீபலட்சுமியை மு.க.ஸ்டாலின் வாழ்த்திப் பேசும்போது, ‘‘இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, நமக்கு கிடைத்த சந்தர்ப்பம்தான் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தல். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் நடைபெறக்கூடிய தேர்தலாக அமைய வேண்டும். எத்தனையோ கட்சிகள், எத்தனையோ தலைவர்கள், ஏன் கட்சி தொடங்குவதற்கு முன்பே நான்தான் முதல்வர் என்று சொல்கின்றனர்.
உயர் ஜாதியில் இருப்பவர்கள் மட்டும் தங்களது பெயருக்கு பின்னால் பட்டங்களை போட்டு வந்த நிலை மாறி, பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களது பெயருக்கு பின்னால் பட்டங்களை போட்டு கொள்ளும் நிலையையும், அமைச்சர்களாக உருவாகக் கூடிய நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்தது திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இயக்கத்தை ஒழிக்கவும், அழிக்கவும், களங்கப்படுத்த வேண்டும் என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு பாடம் புகட்ட உங்களை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும்.
செயலற்ற, துருப்பிடித்த ஆட்சியில் எந்த துறையிலும் ஒரு பணிக்கூட நடக்கவில்லை. கோட்டைக்கு வாரம் ஒரு முறை முதல்வர் வருகிறார். முதல்வராக இருந்தபோது திமுக தலைவர் கருணாநிதி, கோட்டைக்கு வரவில்லை என்றால்தான் செய்தி வரும். ஆனால், முதல்வர் ஜெய லலிதா, கோட்டைக்கு வருவதே செய்தியாக வருகிறது என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்து செய்தியை மணமக்களிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.