

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தெரிந்த சூரியகிரகணத்தை திரளான மக்கள் ஆர்வமுடன் கண்டனர். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. கொடைக்கானலில் உள்ள வானிலை ஆய்வு நிலையத்தில் விஞ்ஞானிகள் சூரியகிரகண நிகழ்வு குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் டிசம்பர் 26-ம் தேதி சூரியகிரகணம் காலை 8.30 மணி முதல் பகல் 11.30 மணி நிகழ வாய்ப்புள்ளது. இதில் முழுமையான சூரியகிரகணம் காலை 9.33 மணிக்கு நிகழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த சூரியகிரகணம் கேரளாவில் உள்ள அரபிக்கடலில் தொடங்கி தமிழகத்தில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல்குடியை அடுத்து கடலுக்கு செல்லும். இருந்தபோதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதை காணலாம். சூரியகிரகணத்தை நேரடியாக பார்க்ககூடாது பாதுகாப்பான கண்ணாடி அணிந்து பார்க்கவேண்டும் என்றும் வானிலை ஆராய்ச்சிநிலைய விஞ்ஞானிகள் குமரவேல், எபினேசர், செல்வேந்திரன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சூரியகிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் கொண்டு காலையிலேயே தயாராகினர்.
சூரிய கிரகணத்தைக் காண கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக் பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சூரியகிரகணத்தை பார்க்க சிறப்பு கண்ணாடிகளும் அங்கேயே வழங்கப்பட்டது. மேலும் கொடைக்கானலில் உள்ள வானிலை மையத்தில் சூரியகிரகணத்தின்போது சூரியனில் ஏற்படும் அடுத்தடுத்த மாற்றங்கள் குறித்து ஏழுவிதமான டெலஸ்கோப்புகள் உதவியுடன் விஞ்ஞானிகள் ஆய்வுமேற்கொண்டனர்.
திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கல்லூரியில் சூரியகிரகணத்தை பார்க்க மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்க்க ஏதுவாக டெலஸ்கோப் மற்றும் சிறப்பு கண்ணாடிகள் மூலம் சூரியகிரகணத்தை பார்க்க தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை முதலே சூரியகிரகணத்தை பார்க்க மக்கள் கூடினர். காலை 8.30 மணிக்கு சூரியகிரகணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் திண்டுக்கல் பகுதியில் வானம் மேகமூட்டமாக இருந்தததால் காணமுடியவில்லை.
இருந்தபோதும் வந்திருந்த பொதுமக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். காலை 9 மணிக்கு மேல் மேகமூட்டங்கள் விலகியதையடுத்து சூரியகிரகணம் தென்பட்டது. காலை 9.32 மணிக்கு முழுவளையவடிவிலான சூரியகிரகணத்தை மக்கள் பார்த்தனர்.
விஞ்ஞானிகள் கூறுகையில், கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் வானிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு சூரியன் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது நடந்த சூரிய கிரகணத்தையும் ஆராய்ந்தோம். இதற்கு முன்பாக இதுபோன்ற சூரிய கிரகணம் கடந்த 1996 ம் ஆண்டு ராஜஸ்தானில் காணப்பட்டது. அடுத்து முப்பது ஆண்டுகள் கழித்துதான் இதுபோன்ற சூரியகிரகணத்தை பார்க்கமுடியும், என்றனர்.
திண்டுக்கல்லில் சூரியகிரகணத்தை ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்.