Published : 26 Dec 2019 10:33 AM
Last Updated : 26 Dec 2019 10:33 AM

வரத்து சீரடைந்து வருவதால் மெல்லக் குறைந்து வரும் வெங்காயம் விலை: மொத்த விலையில் முதல் ரகம் ரூ.80-க்கு விற்பனை

பெரிய வெங்காயம் வரத்து ஓரளவுக்கு சீரடைந்து வருவதைத் தொடர்ந்து, அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. முதல் ரக வெங்காயம் நேற்று மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டது.

பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதன் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் முதல் ரக வெங்காயம் ஒரு கிலோ ரூ.180 வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் மத்திய அரசு உள்நாட்டு வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்து, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்த வெங்காயம் டிச.9-ம் தேதி முதன் முதலாக தமிழகத்துக்கு வந்தபோது, கிலோ ரூ.100-க்கு மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திருச்சியில் முதல் ரக வெங்காயம், மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராசு, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: திருச்சி வெங்காய மண்டிக்கு தற்போது தினந்தோறும் துருக்கி மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 30 டன் அளவுக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 100 டன் அளவுக்கும் வருகிறது. இதனால் தற்போது மொத்த விலை கிலோ ரூ.80-ஆக குறைந்துள்ளது.

எகிப்து, துருக்கி வெங்காயங்கள் அளவில் பெரிதாக இருப்பதால் உணவகங்களுக்கு அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். சில்லறை வியாபாரிகள் நம்நாட்டு வெங்காயத்தை தான் விரும்பி, வாங்கிச் செல்கின்றனர். சில்லறை விலையில் முதல் தர வெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்கின்றனர்.

வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும் என முன்பே கணித்து உள்நாட்டு வெங்காய ஏற்றுமதிக்கு இரு மாதங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தால், விலை உயர்வை தவிர்த்திருக்கலாம். அரசு வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்திருக்காவிடில் வெங்காயத்தின் விலை பெரும் உச்சத்தை தொட்டிருக்கும்.

சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரையில் தற்போது முதல் தரம் கிலோ ரூ.120-க்கும், கடைசி தரம் ரூ.60-க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து வெங்காயம் வரத்து அதிகமானால், விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகலாம். மார்ச் முதல் ஜூன் வரை வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என்றார்.

படவிளக்கம்

ஏ. தங்கராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x