Published : 26 Dec 2019 10:30 AM
Last Updated : 26 Dec 2019 10:30 AM

‘செக் பவர்’ கனவில் வேட்பாளர்கள்- உண்மை அறிந்து விழிப்பார்களா?

கோப்புப் படம்

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் சிலர் பெரும் திட்டத்துடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கனவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் சிலர் கூறியது:

கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றங்களுக்கு பதவிக்கு வந்தவர்களில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகிய மூவருக்கும் ‘செக் பவர்’ எனப்படும் காசோலை வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இவர்களில் யாரேனும் ஒருவர் கையொப்பம் இல்லையென்றாலும் காசோலை செல்லாது. பின்னர் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்த நிலையில் மக்கள் பணி தேக்கமடைவதை தடுக்க ஊராட்சி செயலர்களுக்கே தற்காலிகமாக ‘செக் பவர்’ அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஒவ்வொரு ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கே ஊராட்சிகளுக்கான ‘செக் பவர்’ அதிகாரத்தை வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து உள்ளாட்சித் துறையிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை உள்ளாட்சித் துறை அமைச்சகம் பரிசீலனையிலும் வைத்துள்ளது. ஏறத்தாழ இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அமைச்சகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது ஊராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுவோரில் சிலர், ‘அவலை நினைத்து உரலை இடித்த கதைபோல்’ செயல்பட்டு வருகின்றனர். அதாவது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் மீண்டும் ‘செக் பவர்’ அதிகாரம் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரிடமே வழங்கப்படும் என சிலர் கருதுகின்றனர். எனவே, எப்படியாவது துணைத் தலைவர் ஆகிவிட வேண்டும் என்ற ஏக்கத்தில் தாராளமாக செலவழித்தும், பல்வேறு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். ஆனால், இந்த முறை உறுதியாக ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிக்கு ‘செக் பவர்’ அதிகாரத்தை வழங்குவதில்லை என்ற முடிவில் உள்ளாட்சி அமைச்சகம் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அரசு மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள், அவப்பெயர்களை தவிர்த்திட இந்த முடிவை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிகிறது. இதையெல்லாம் அறியாமல் துணைத் தலைவர் பதவி கனவில் சில வேட்பாளர்கள் கடன் பெற்றுக் கூட தாராளமாக செலவழித்து வருகின்றனர். இதுபோன்ற எண்ணத்துடன் தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு பிறகு வேதனைக்கு உள்ளாக உள்ளனர்.

இவ்வாறு கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x