

சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தொடர் வாழ்வாதாரத்திற்கும், வளமான வாழ்வுக்கும் தமிழக அரசு உதவிகள் செய்திட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (டிச.26) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் 2004 ஆம் ஆண்டில் டிசம்பர் 26 ஆம் தேதி காலையில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமியால் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் சுமார் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
எனவே, சுனாமியின் கோரத்தாண்டவத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு அரசும், பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இன்றைய தினம் தமிழகத்தில் சுனாமியின் தாக்கம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் சுனாமி என்ற ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அச்சம், பாதிப்புகள் இன்னும் நம் மனதை விட்டு நீங்கவில்லை. அதாவது சுனாமியால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்ததும், ஏராளமானவர்களின் உடல் பாதிப்படைந்ததும், பொதுமக்களின் உடைமைகள் சேதமடைந்ததும், கடற்கரைப் பகுதியில் வசித்த மாணவர்களின் பாடப்புத்தகங்கள், சீருடைகள் அடித்துச் செல்லப்பட்டதும் மிகவும் வேதனைக்குரியது, வருத்தம் அளிக்கிறது.
சுனாமியின் தாக்கத்தால் ஏராளமான மக்கள் தங்கள் உறவினரை, உடைமைகளை, கால்நடைகளை இழந்து வேதனையில் இருந்தார்கள்.
தமிழக அரசு, பல்வேறு அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர், பல்துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல தரப்பினர் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியதும், மறுவாழ்வுக்காக பல்வேறு உதவிகள் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த குழந்தைகளும் பரிதவித்தனர். இந்நிலையில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் பிற குழந்தைகளை தத்தெடுத்ததும், பெற்றோரை இழந்த குழந்தைகளை பலர் தத்தெடுத்ததும் நடைபெற்றது. ஆனாலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தமிழக அரசு சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை முழுமையாக அடையாளம் கண்டு அனைத்துக் குடும்பங்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழக அரசு பொதுமக்களிடம் சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைக்கவும், அதன் பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் விழிப்புணர்வு மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக இயற்கைச் சீற்றம் குறித்து முன்னரே தகவலைத் தெரிந்து கொள்வதற்கும், அதன் தாக்கத்தில் இருந்து தமிழக மக்களையும், தமிழகத்தையும் காப்பாற்ற புதிய தொழில்நுட்பம், நவீன கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுமார் 2.30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை உயிரிழக்கச் செய்த சுனாமியின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தருணத்தில் தமிழக அரசும், தமாகா உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், தொண்டு நிறுவனத்தினரும் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து உதவிகரமாகச் செயல்பட வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.