

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4 கோடி முறைகேடு செய்ததாக சென்னையைச் சேர்ந்த ஒருவரைப் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர்அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர். ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக சாத்தூர், தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி 38 பேர் 2016-ல் தலா ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை ஆசிரியர் சுந்தர் தெரிவித்த சென்னை ஐஓசி காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரைத் தொடர்பு கொண்டு, அவரது மனைவி இந்திராவின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர்.
பணம் அளித்த 38 பேருக்கும் 2016-ல் பணிக்கான உத்தரவுக் கடிதம் வந்துள்ளது. அதை எடுத்துக் கொண்டு மதுரை மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகக் கண்காணிப்பாளர் சதீஷ்குமாரிடம் காண்பித்தனர். அவர், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவு வரவில்லை. உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறு கூறி அனுப்பி உள்ளார்.
நீண்ட நாட்களாகியும் வேலைக்கு அழைக்காததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தஇளைஞர்கள், மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சுந்தரை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். ஏமாற்றப்பட்ட இளைஞர்கள், ஆறுமுகத்தைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஆறுமுகம்ரூ.4 கோடி வரை முறைகேடுசெய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.