

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கும் அதன் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (டிச.26) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 27-ம் தேதி, வெள்ளிக்கிழமை மற்றும் 30-ம் தேதி திங்கட்கிழமை தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
மூன்றாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளைப் பறித்து, வாக்களித்துத் தேர்வு செய்யும் ஜனநாயக நடைமுறைகளைப் புறக்கணித்துவிட்ட ஆளும் அதிமுக அரசின் அதிகாரத் துணையோடு தனது ஊழல் கரங்களை விரித்து அகப்பட்டதை சுருட்டுவது போல் நடந்துகொண்டதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
தெருக்களைக் கூட்டிச் சுத்தம் செய்ய வேண்டிய கடமை, பொறுப்புகளைக் கைகழுவி விட்டு, குப்பைகள் மீது வரிப்போட்டு வசூலித்ததும், வீட்டுக்கு வாடகைக்கு நிகராக வரிகளை கடுமையாக உயர்த்தி வசூலித்ததையும் ஆளும் கட்சியினர் மூடி மறைக்க முடியாது.
உள்ளாட்சி அமைப்புகளில் பழங்குடியினர், பட்டியலினத்தவர் மற்றும் பெண்களுக்கான சட்டரீதியானதும், சமூக நீதி சார்ந்ததுமான இட ஒதுக்கீட்டை நேர்மையான முறையில் அமலாக்க அதிமுக அரசுக்கு விருப்பம் இல்லை. அதனால் தனக்கு சாதகமாக இட ஒதுக்கீட்டுத் தொகுதிகளை மாற்றிக் கொண்டது.
ஆனால், சமூக நீதி போராட்டத்தை முன்னெடுத்து வரும், பொதுமக்களுக்கும், எதிர்க்கட்சிகளும் நடத்திய போராட்டங்களும் குறிப்பாக திமுக தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டமும் வெற்றிகரமாக முடிந்ததால் இன்று உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து நமது பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் உரிமை கிடைத்திருக்கிறது.
ஆனாலும் முழுமையாக அல்ல; அரை குறையாகவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே அதுவும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக அரசு திருத்தியமைத்த 9 மாவட்டங்களிலும் வார்டு எல்லைகள் முறையாக வரையறுக்கத் தவறிவிட்டதால் தேர்தலைப் பின்னர் நடத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அது எப்போது நடக்குமோ?
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவே இல்லை. ஆணையம் நிர்வாகக் காரணங்கள் என்று பூசி மெழுகியுள்ளது. 1996, 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் செயல்பட்ட நிர்வாகம் அதிமுக ஆட்சியில் செயலிழந்து விட்டது என்பதற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஆவணபூர்வமாக சாட்சியமளித்துள்ளது.
முன்னர் ஜெயலலிதா எதிர்த்து வந்த மத்திய அரசின் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மாநில விரோதக் கொள்கைகளை அதிமுக அரசு ஆதரித்து வருகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வரும் மத்திய பாஜக அரசை எதிர்க்கத் துணிவின்றி சரணடைந்து விட்டது. அதிமுக ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அமைச்சர்களின் ஆதாயக் கணக்கு மட்டுமே உயர்ந்து வருகிறது.
இவற்றை எல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 150 நாட்களாக உயர்த்தவும், இடதுசாரிக் கட்சிகள் 200 நாட்களாக உயர்த்தவும் உறுதியளித்தன. இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தற்போது போராடி வருகின்றன.
நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரித்து பொதுமக்களின் சுகாதாரம் சீர்குலைந்துள்ளது. டெங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என புதுப்புது நோய்கள் பரவி வருகின்றன. மனித உயிரிழப்புகளும் தொடர்கின்றன. இதனைத் தடுக்கத் தவறிய அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
கிராம மக்களின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட்டு வரும் திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கும் அதன் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கும் வாக்களித்து உள்ளாட்சி ஜனநாயகத்துக்கு உயிரூட்டுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாக்காளர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.