

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கீழவெண்மணியில் கடந்த 1968-ம் ஆண்டு கூலி உயர்வு கேட்டுப் போராடியதற்காக விவசாய கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தினர் 44 பேர் ஒரே வீட்டுக்குள் அடைக்கப்பட்டு, நிலச்சுவான்தார்களால் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். இச் சம்பவத்தின் 51-ம் ஆண்டு நினைவு தினம் கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சிக் கொடியை ஏற்றியதுடன், தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன், விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் மற்றும் நிர்வாகிகள் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகள், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.