

கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது:
20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த சினிமா டிக்கெட் விலை நிர்ணயத்தை அதிமுக அரசுதான் செய்து கொடுத்தது. அதற்குப் பின்னர்தான் திரையரங்குகள் மூடப்படாமல், கலையரங்கம், திருமண மண்டபங்களாக மாறுகின்ற நிலை மாறி, திரையரங்குகளுக்கு மறுவாழ்வு கிடைத்தது.
திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவை. இந்த வரி முதலில் 30 சதவீதமாக இருந்தது. இது மிகவும் அதிகமாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறினர். இதையடுத்து, 10 சதவீதமாக குறைக்கப்பட்டு, மீண்டும் அவர்களது கோரிக்கையை ஏற்று 8 சதவீதமாக முதல்வர் குறைத்து உள்ளார்.
திருட்டு விசிடியை தடுக்க அதிமுக அரசுதான் தனிச்சட்டம் கொண்டு வந்தது. பின்னர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்தான். திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால், திருட்டு விசிடி மற்றும் இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாவதைத் தடுக்க அரசு முயற்சி எடுக்கும் என்றார்.