

கொடநாடு எஸ்டேட் உட்பட ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்த பல நிறுவனங்களுக்கு தற்போது தானே உரிமையாளர் என்று வருமானவரித் துறைக்கு அளித்த விளக்க கடிதத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின், அவரது தோழியான சசிகலா 2017- பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், அதே ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், சசிகலாவின் உறவினர்கள் வீடுகள், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகம் என பல இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
அதன்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பல்வேறு சொத்துகள் வாங்கியது, கடன் வழங்கியதன் மூலம் ரூ.1,900 கோடி பழைய நோட்டுகள் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வாங்கப்பட்ட சொத்துகளுக்கான நிதி குறித்து வருமானவரித் துறை கேள்வி எழுப்பியது. இதற்கு, சசிகலா சார்பில் அவரது ஆடிட்டர் கடந்த டிசம்பர் 11-ம் தேதி விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது: சசிகலாவுக்கான அனைத்து வருமானமும், அவரது சொத்துகள் மற்றும் வணிகம் மற்றும் இதர ஆதாரங்களில் இருந்து கிடைத்து வருகிறது. அதில் குறிப்பிட்டுள்ள சொத்துகள் மற்றும் வர்த்தக வருவாய்கள் குறித்து, கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டு அறிக்கையின்படி, நமது எம்ஜிஆர் நிறுவனத்துக்கு உரிமையாளராக சசிகலா உள்ளார். அதன்கீழ் டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிகை மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர, ஜெயா பார்ம் ஹவுசஸ், ஜெ.எஸ்.ஹவுசிங் டெவலப்மென்ட், ஜெய் ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தார்.
மேலும் கொடநாடு எஸ்டேட், ராயல் வேலி ப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிகேசன்ஸ், சசிஎன்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களில் கடந்த 2016-ம் ஆண்டுஏப்ரல் 1 முதல் அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி வரை ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப்பின், பங்குதாரர் அமைப்பு கலைக்கப்பட்டதால், சசிகலாவே இந்த நிறுவனங்களுக்கு உரிமையாளராக மாறிவிட்டார்.
இதுதவிர, இந்தோ தோஹாகெமிக்கல்ஸ் மற்றும் பார்மாசுடிகல்ஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இயக்குநராக சசிகலா உள்ளார். மேலும், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் 41 லட்சத்து 66 ஆயிரம் பங்குகள், அரே லேண்டு டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் பங்குகள், மாவிஸ் சேட்காம் நிறுவனத்தில் 7 லட்சத்து 2 ஆயிரம் பங்குகள், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் நிறுவனத்தில் 36 ஆயிரம் பங்குகள் சசிகலா வசம் உள்ளன.
மேலும், அவர் கைவசம் வைத்திருந்ததாக கூறப்படும் ரூ.1,900 கோடி பழைய நோட்டுகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கியிலேயே சசிகலா பெயரில் டெபாசிட் செய்யப்பட்டன. அந்த பணத்தின் மூலம் வேறு எந்த சொத்தையும் வாங்கவோ, கடன் அளிக்கவோ இல்லை.
வருமான வரி சோதனையின் போது வேதா நிலையத்தில் கைப்பற்றப்பட்ட டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.7 கோடியே 64 லட்சத்தை பொறுத்தவரை, அவை கொடநாடு உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பானவையாகும். இவ்வாறு அந்த விளக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.