

டீக்கடையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.50 லட்சத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வியாபாரியை போலீஸார் பாராட்டினர்.
சென்னை ஏழுகிணறு, முதலியார் தெருவைச் சேர்ந்தவர் கோட்டமுத்து. இவர், பாரிமுனை அருகே 2-வது கடற்கரை சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, 3,50,000 பணத்தை கைபையில் எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு சென்றுள்ளார். டீ குடித்த பின்னர், அங்கேயே பணப்பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்துக்கு பிறகு பணம் தவறவிட்டது நினைவுக்கு வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டீக்கடை சென்று பார்த்துள்ளார். அங்கு பணப்பை காணாததைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டாவது கடற்கரை சாலையில் பூட்டு, சாவி பழுதுபார்க்கும் கடை நடத்தும் ரமேஷ், அவரது உறவினர் கருணாகரன் ஆகியோர் காவல் நிலையம் வந்து, அந்த பணப்பையை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
டீ குடிக்கச் சென்றபோது, ரூ.3.5 லட்சம் கேட்பாரற்று கிடந்ததாக அப்போது அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர், இதையடுத்து நேர்மையாக நடந்து கொண்ட ரமேஷ், கருணா கரன் இருவருக்கும் காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.