Published : 26 Dec 2019 06:56 AM
Last Updated : 26 Dec 2019 06:56 AM

ஊரக உள்ளாட்சிகளில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு; 156 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது: பாதுகாப்புப் பணியில் 60 ஆயிரம் போலீஸார் குவிப்பு

சென்னை

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 156 ஒன்றியங்களில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கு கிறது.

தமிழகத்தில் 3 ஆண்டு தாமதத்துக் குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. சென்னை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து எஞ்சியுள்ள 27 மாவட்டங் களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப் பட்டது. டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. இத்தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2-ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

முதல்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற ஏதுவாக, பிரச்சாரம் நிறைவடைந்தவுடன் சம் பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர் அல்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அனை வரும் வெளியேற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற் காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை பிரச்சாரம் ஓய்ந்ததும், அந்தப் பகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மதுக்கடைகள் மூடல்

மேலும், தேர்தல் நடக்கும் பகுதியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு வரை உள்ள மதுக்கடைகளும் நேற்று மாலை 5 மணிக்கு மூடப்பட்டன. வாக்குப்பதிவு நிறைவடையும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வா கத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மதுபானங்கள் எடுத்துச் செல்வதையும் தடை செய்ய வேண்டும். மீறினால் மது பாட்டில் களை பறிமுதல் செய்ய காவல்துறை யினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடக்கும் வார்டுகளில் கடந்த 2 நாட்களாக வாக்காளர் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் அந்தந்த வார்டுகளுக்கான துணை வாக்காளர் பட்டியல்களும் தயாரிக் கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குச்சீட்டுகள் ஏற்கெனவே அச் சிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கான தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடப்ப தால், 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. இரு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இளம் நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு தேவையான படிவங்கள், ஆவணங்கள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக் குச்சாவடி அலுவலர்களுக்கான வாக்குச்சாவடிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நேற்று ஒதுக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட உள்ளன. இதையடுத்து, அவர்கள் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்களுடன் தங்களுக்கு ஒதுக் கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு செல் கின்றனர்.

பலத்த பாதுகாப்பு

உள்ளாட்சித் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் பதற்றமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், கூடுதல் காவலர் களை நியமிக்கவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் போலீஸார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 60 ஆயிரத்து 918 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவு நடக்கும் பகுதி களில் நாளை பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு நடக்கும் ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்பு அலுவல கங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப் பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தவும், இணைய தளம் மூலம் தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியை ஏற்படுத்தவும் மாநில தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x