Published : 25 Dec 2019 04:24 PM
Last Updated : 25 Dec 2019 04:24 PM

மாணவி ரபிஹாவுக்கு குடியரசுத் தலைவரே தங்கப் பதக்கத்தை வழங்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

மாணவி ரபிஹாவுக்கு குடியரசுத் தலைவரே தங்கப் பதக்கத்தை வழங்க வேண்டும் என்று விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கிய விழாவில், பட்டமும் தங்கப்பதக்கமும் பெறுவதற்காக அந்த அரங்கில் அமர்ந்திருந்த முஸ்லிம் மாணவி அவமதிக்கப்பட்டிருக்கிறார்.

முதுகலை மக்கள் தொடர்பியல் துறை மாணவியான ரபிஹாவை, அவர் இஸ்லாமியர் என்பதற்காகவே திடீரென அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி ஒரு அறையில் தடுத்து வைத்துள்ளனர். குடியரசுத் தலைவர் அங்கிருந்து சென்ற பின்னரே அவரை நிகழ்ச்சியில் அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் பட்டத்தையும் தங்கப்பதக்கத்தையும் அவருக்குத் துணைவேந்தர் வழங்கிய போது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் இஸ்லாமிய மாணவி ரபிஹா.

அவர் ஹிஜாப் அணிந்திருந்ததால், மத அடிப்படையில்தான் மாணவி ரபிஹா பட்டமளிப்பு விழாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பதோடு குடியரசுத் தலைவரிடமிருந்து பட்டமும் பதக்கமும் பெறுவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது. மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த மதவெறி நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இது போன்று, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெறும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஜனநாயகப்படி தனது எதிர்ப்பை பதிவு செய்த மாணவி ரபிஹாவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

குடியரசுத் தலைவர் மாணவி ரபிஹாவை அழைத்து, அவரே தங்கப் பதக்கத்தை வழங்கி அவரை வாழ்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x