

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அமமுக சார்பில் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு தென்னங்கன்றுகளை கொடுத்து வாக்கு சேகரித்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
பிலாவிடுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்னை மரம் சின்னத்தில் அப்பகுதியில் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த ஒன்றியத்துக்கு டிச.27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மைலன்கோன்பட்டியில் தென்னை மரம் சின்னத்தில் வாக்குகள் கோரி வாக்காளர்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிகாரி முருகேசன் தலைமையிலான பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தென்னங்கன்றுகளை விநியோகித்த பிலாவிடுதியைச் சேர்ந்த ஹரிகரன்(19) என்பவரைப் பிடித்தனர்.
அத்துடன் சுமார் 100 தென்னங்கன்றுகளை பறிமுதல் செய்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஹரிகரன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.