பணமதிப்பிழப்பு நடவடிக்கை; சசிகலா செயல்பாடு பற்றி வருமான வரித்துறை தகவல்: கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை; சசிகலா செயல்பாடு பற்றி வருமான வரித்துறை தகவல்: கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
Updated on
3 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒருபகுதி வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎ.ஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 22 செப்டம்பர் 2016 -ல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 8 நவம்பர் 2016 -ல் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பாஜக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கட்டங்களில் கணக்கில் காட்டப்படாத ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி ரூபாயை புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன.

கடந்த 2017 நவம்பர் 9 ஆம் தேதி வருமான வரித்துறை சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில் சோதனை நடத்தியது. அதில் சிக்கிய இரண்டு தாள்களில் சசிகலாவின் நெருங்கிய உறவினர் சிவகுமார் கைப்பட எழுதிய விவரங்களில் ரூ.1674.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய பட்டியலுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதையொட்டி சம்மந்தப்பட்டவர்களிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இக்காலக்கட்டங்களில் ஜெயலலிதாவின் வீட்டிலும், கொடநாடு பங்களாவிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் வெளிக் கொணரப்பட்டு பல இடங்களில் பாதுகாப்பதற்காக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மூலம் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்தைக் கொண்டு சென்னையில் பல இடங்களில் வணிக வளாகங்கள், புதுச்சேரியில் உல்லாச விடுதி, கோவையில் காகித ஆலை, காஞ்சிபுரத்திற்கு அருகில் சர்க்கரை ஆலை, பழைய மகாபலிபுரம் சாலையில் மென்பொருள் நிறுவனம், கோவையில் 50 காற்றாலைகள் என தமிழகம் முழுவதும் பல இடங்களில் சட்டவிரோதமாக பணமதிப்பு இழந்த தொகையின் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பேரங்கள் நடைபெற்றதையும் வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.

மேலும், தமிழக அரசின் மதிய உணவு திட்டத்திற்காக முட்டை, பருப்பு மற்றும் சத்துமாவு விற்பனை செய்கிற திருச்செங்கோட்டைச் சேர்ந்த டி.எஸ். குமாரசாமிக்கு சொந்தமான கிறிஸ்டி நிறுவனத்திடம் ரூபாய் 240 கோடி செல்லாத நோட்டுகள் கொடுக்கப்பட்டு, ஓராண்டு கழித்து அதே தொகையுடன் 6 சதவீத வட்டியுடன் ரூபாய் 2 ஆயிரம் மதிப்பு கொண்ட புதிய நோட்டுகளாக மாற்றித் தர வேண்டுமென்று வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த தொகையை சென்னை தியாகராயநகர் வன்னியர் தெருவில் உள்ள சசிகலாவின் நெருங்கிய உறவினரான சிவகுமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தில் இருந்து பல அட்டை பெட்டிகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை வருமான வரித்துறையிடம் சிவகுமார் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வகையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் செல்லாத தொகையான ரூபாய் 1911.50 கோடி வழங்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.

மேலும், இத்தொகையின் மூலம் தேனியில் ரூபாய் 100 கோடிக்கு 1897 ஏக்கர் எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு அருகில் நவீன் பாலாஜி என்பவருக்கு சொந்தமான உல்லாச விடுதி ரூபாய் 168 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இத்தகைய சொத்துக்கள் அனைத்தும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகும், செல்லாத நோட்டுக்களை வங்கியில் திரும்ப செலுத்தி, புதிய நோட்டுகளாக மாற்றுவதற்காக குறிப்பிடப்பட்ட இறுதி நாளான 2017 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள்ளும் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு, சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வருமான வரித்துறை மூலம் நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளன.

1991 இல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது சொத்து மதிப்பு 2.01 கோடியாக இருந்தது, 1996 இல் ரூபாய் 66.44 கோடியாக உயர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். இதற்கு சசிகலா உடந்தையாக இருந்த குற்றத்தை செய்ததால், அவரும் தண்டிக்கப்பட்டார். ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத வகையில் ஏறத்தாழ 2000 கோடி ரூபாய் வருமான வரித்துறையின் சோதனையின் மூலம் தற்போது சிக்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை சசிகலாவின் கைக்கு எப்படி வந்தது ? அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் மிகப்பெரிய பயனாளியாக சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் விளங்கினார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒருபகுதி தான் வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தினால் பாதிக்கப்பட்ட போது, அதை முதலீடாக மாற்றி சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்குவதற்கு யார், யார் உதவியாக இருந்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு மிகப்பெரிய கிரிமினல் ஊழல் குற்றமாகும். இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

இன்றைய அ.தி.மு.க.வோடு சசிகலாவுக்கு சம்மந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், அம்மாவின் பேரில் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க.வுக்கும், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் சம்மந்தம் இல்லை என்று எவரும் கூற முடியாது. எனவே, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சம்மந்தப்பட்டுள்ள இத்தகைய சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத்துறையின் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளில் நடந்துள்ள பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அம்பலமாவதற்கும், அதில் பயனடைந்தவர்கள் தண்டனைக்கு உட்படுவதற்கும் உரிய வாய்ப்பாக இந்த விசாரணை அமைய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in