

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட 85 வயது முதியவர் நாராயணப்பாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டம் முஸ்லிம்களை ஒதுக்குவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழகத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. முஸ்லிம்கள், இலங்கை தமிழர்களை இச்சட்டம் பாரபட்சமாக நடத்துவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.
இச்சட்டத்தை எதிர்த்து கடந்த 17-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதுதவிர கடந்த 23-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 85 வயது முதியவர் நாராயணப்பாவும் கலந்துகொண்டார். பேரணியில் பேசிய நாராயணப்பா, தான் ஓசூர் சமத்துவபுரத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்ததாகவும் பரம்பரை பரம்பரையாக திமுகவில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தலைவர் கருணாநிதியும் ஸ்டாலினும் தங்களுக்கு ஒன்றுதான் என தெரிவித்த நாராயணப்பா, திமுக அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொள்வேன் என தெரிவித்தார். இச்சட்டத்தால் முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நாராயணப்பா கூறினார். அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து நேற்று (டிச.24) மாலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாராயணப்பாவை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்துப் பேசினார். அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அதில், அவரின் குடும்பத்தைப் பற்றியும் தொழில் பற்றியும் ஸ்டாலின் கேட்டறிந்தார். தான் விவசாய கூலியாக இருப்பதாக நாராயணப்பா தெரிவித்தார். மேலும், அங்கிருந்த எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்த ஸ்டாலின், கருணாநிதியின் சிறிய சிலையொன்றையும், புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
தனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகவும் தங்களை பார்த்த பிறகு சரியாகி விட்டதாகவுகம் நாராயணப்பா ஸ்டாலினிடம் தெரிவித்தார். முரசொலியில் இன்று அவர் குறித்து செய்தி வருவதாக ஸ்டாலின் நாராயணப்பாவிடம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின், "முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் பெரியவர் நாராயணப்பாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தேன்.
அவரது கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு!" என பதிவிட்டுள்ளார்.