வாக்காளர்கள் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது: நடிகர் பார்த்திபன் வேண்டுகோள்

வாக்காளர்கள் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது: நடிகர் பார்த்திபன் வேண்டுகோள்
Updated on
1 min read

வாக்காளர்கள் பணத்துக்காக வாக்களிக்கக்கூடாது, நல்ல கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மனநிலையில் வாக்களிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே நர்சரி கார்டனில் நடந்த மரம் நடும் விழாவில், பங்கேற்ற நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் 2021-ல் ஆட்சிக்கு வருவதாகக் கூறியிருப்பதை, சுவாரசியமான திரைப்படத்தைப் போல ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும்போது எதிர்ப்பு இருப்பது இயல்பு. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வரும்போது எதிர்ப்பு இருந்தது. தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்கு வரும்போதும் எதிர்ப்பு இருக்கிறது.

வாக்காளர்கள் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது. நல்ல கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மனநிலையில் வாக்களிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் இருந்து இந்த மனநிலை மக்களிடத்தில் இருந்து மாற வேண்டும்.

மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டதுதான் மக்களாட்சி. அதனால் குடியுரிமைச் சட்டத்தைப் பொறுத்தவரை மக்களுடைய கருத்திற்கு செவி சாய்க்க வேண்டும்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே மக்களுக்காக நிறைய சிந்திக்கின்றனர்.

அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது நிறைய நியாயங்கள் பேசுகின்றனர். ஆனால் அவர்களே ஆளும் கட்சியாக மாறும் போது, அதே நியாயங்கள் அங்கு நியாயமாக இருப்பதில்லை, ஆளுங்கட்சியாக வரும்போது மக்களுக்கான செயல்பாடுகளை செய்தால் இங்கு பிரச்சினையே இருக்காது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in