Published : 25 Dec 2019 08:14 AM
Last Updated : 25 Dec 2019 08:14 AM

உதகை, ஈரோடு, கோவை, திருப்பூரில் தெளிவாக காணலாம்; நாளை நிகழும் சூரிய கிரகணத்தை சிறப்பு கண்ணாடி மூலம் ரசிக்கலாம்- விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தகவல்

மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார்நிறுவனம், இந்திய வானவியல் கழகம்,மத்திய அரசு நிறுவனமான சென்னை கணிதவியல் மையம், தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் மையம், அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சூர்ய கிரகணம் குறித்து விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஈரோட்டில் நேற்று நடந்தது.

இதில், மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் ஆகியோர் சூரிய கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள், மூட நம்பிக்கைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

நாளை (26-ம் தேதி) காலை 8.06 மணியிலிருந்து 11.17 மணி வரை வளைவடிவ சூரிய கிரகண நிகழ்வு வானில் அதிசயத்தைப்போல் நிகழவுள்ளது. இதனை கல்வெட்டியல் அறிஞர்கள் கங்கண சூரிய கிரகணம் என்று தெரிவித்துள்ளனர். சின்னநிலா பெரிய சூரியனை மறைப்பதால், முழுவதும் மறைக்க முடியாமல் வளைவடிவத்தில் சூரியன் தெரியும்.

இந்த கிரகணம் சில விநாடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை இடங்களுக்குஏற்றவாறு நீடிக்கும் வளைவடிவ கிரகணம் தமிழகத்தில் உதகை, ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, திருச்சி போன்றபகுதிகளில் தெளிவாகவும், மீதியுள்ளதமிழக மாவட்டங்களில் பகுதியளவும் தெரியும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்காமல், சூரியக் கண்ணாடிகளைக் கொண்டு பார்க்க வேண்டும்.

சூரிய கிரகணம் குறித்து கூறப்படும் புராணக் கதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மறுக்கப்பட்டு விட்டது.சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள்வெளியே வரக்கூடாது, கிரகணத்தின்போது சமைத்த உணவை சாப்பிடக் கூடாது போன்றவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதேபோன்ற சூரிய கிரகணம் அடுத்ததாக 2031-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி மட்டுமே பார்க்க முடியும் என்றார்.

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் சூரிய கிரகணத்தை சூரியஒளி வடிகட்டி கண்ணாடிகள், தொலைநோக்கிகள், ஊசிதுளைக் கேமரா ஆகியவை மூலம் பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x