

தமிழகத்தில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையும் திருப்பலி நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் பரவலாக அமைக்கப்பட்டிருந்த குடில்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாத தொடக்கம் முதலே தேவாலயங்களில் கேரல் பாடல்களுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிறிஸ்துவின் பிறப்பை வரவேற்கும் வகையில் தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் குடில்கள் ஜொலித்தன. தேவாலயங்கள் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துமஸை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேற்று (24-ம்தேதி) உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், களியக்காவிளை, கருங்கல், அருமனை, குளச்சல் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்கார குடில்களை குழந்தைகளுடன் சென்று ஏராளமானோர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையிலும், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்தில் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையிலும் நள்ளிரவில் திருப்பலிகள் நடைபெற்றன. இதுபோல் அனைத்து கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. குமரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் ஆயர் செல்லையா தலைமையில் நடந்தசிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் பெந்தேகோஸ்தே சபை, சீரோ மலபார், இரட்சணிய சேனை, லண்டன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் சார்பிலும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை, ஜெப வழிபாடுகள் நேற்று மாலை முதல் நடைபெற்றன.
திருநெல்வேலியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயம், தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திலும் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வேளாங்கண்ணி புனித அன்னை பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா, சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் தேவாலயங்களிலும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.