Published : 25 Dec 2019 07:56 AM
Last Updated : 25 Dec 2019 07:56 AM

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது, விட்டுக்கொடுத்து வாழ்வது போன்ற உயரியநெறிகளை பயிற்றுவிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், நண்பர்கள் யாவருடனும் நல்லுறவு கொண்டு மகிழ்ச்சியாக வாழவும் கிறிஸ்துமஸ் விழா வழிகாட்டுகிறது. நம் அனைவரது வாழ்விலும் இப்பண்டிகை மகிழ்ச்சி, சந்தோசம், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி: அன்பின் திருவுருவமாம், கருணையின் வடிவமாம் இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். ‘வழி தவறிய ஆட்டை தேடிச் சென்று மீட்கும் மேய்ப்பன் போன்று, பாவம் எனும் முள்ளிடையே நிற்கும் மனிதர்களையும் தேடிச் சென்று மீட்பது என்னுடைய பணி’ என்றுரைத்த இயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில் அவர்போதித்த அன்பு வழியை மக்கள்அனைவரும் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்நாளில் உறுதியேற்போம்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: அனைவரிடத்திலும் அன்பு, பகைவரிடத்திலும் பரிவு, பெற்ற பெருவாழ்வை பிறருடன் பகிர்ந்து வாழும் சகோதரத்துவம், ஏற்றத்தாழ்வுகளற்ற சமத்துவ சமூகம் என்பன போன்ற உன்னத மான வாழ்க்கை நெறிகளை வழங் கிய வள்ளல் இயேசு பெருமான் பிறந்த கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தாமல், பிறர் தவறுகளையும் தன் மீது சுமந்துகொண்ட பெருமகனாக இயேசுநாதரின் வாழ்க்கை அமைந்திருந்ததை வரலாற்றில் காண்கிறோம். அன்பும் அமைதியும் மிக்கவாழ்க்கை அனைவருக்கும் வாய்த்திட வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் விழாவின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற கிறிஸ்தவ சமுதாய மக்களுக்குத் திமுக துணை நிற்கும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் அனைவரின் வாழ்விலும், வளமும், நலமும் பெருகிட அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இயேசுபிரானின் போதனைகளுக்கு நிகழ்கால உதாரணமாக வாழ்வது தான் அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகும். அதை நனவாக்க உழைப்போம் என்றுகிறிஸ்துமஸ் நாளில் உறுதியேற்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உயர்ந்த இலட்சியங் களுக்காகப் போராடுபவர்களுக்கு சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக் கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில் வாழ்ந்து காட்டியஇயேசுபிரானின் மந்திரச் சொற்களை மனதில் கொண்டு தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கும், தமிழ்ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பகைவரிடத்திலும் அன்புகாட்ட வேண்டும் என்றும், இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் மக்களுக்கு போதித்த இயேசு பிரான் பிறந்த கிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

விசிக தலைவர் திருமாவளவன்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்து வத்துக்காக அறவழியில் போராடிய மகத்தான போராளி இயேசு பெருமானின் பிறந்தநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர்: அன்பு, பொறுமை, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, மன்னிப்புஉள்ளிட்ட தூய நற்பண்புகளை உலகுக்கு தந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை, எளிய மக்களை நேசியுங்கள், அமைதியை உருவாக்குங்கள், அன்பு செலுத்துங்கள், ஆண்டவர் மேல் நம்பிக்கை வையுங்கள் என்ற இயேசு பிரான் பிறந்த கிறிஸ்துமஸ் நாளில், அனைவருக்கும் வாழ்த்துகள்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே இயேசுநாதர் காட்டிய வழியில், இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு கொடையளிப்பதுதான். இயேசுநாதரின் இந்த ஒற்றை நோக்கத்தைவிடசிறந்த பொதுவுடைமைக் கொள்கை இந்த உலகில் இருக்க முடியாது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவுமில்லை என்ற இயேசுநாதரின் சொற்கள் எத்தகைய சூழலிலும் உற்சாகத்தைத் தருபவை. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

சமக தலைவர் சரத்குமார்: இறையருளால் மக்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்க, அன்பு பெருகியிருக்க பிரார்த்தித்து, உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ சொந்தங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர்: மனித வாழ்வில் நம்பிக்கை என்ற சக்தி வந்துவிட்டால் உலகில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதனை அனைவரும் உணர ஆன்மிக ஒளியேற்றியவர் இயேசு கிறிஸ்து. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்: பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடும் அனை வருக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள் ளனர்.

மேலும், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந் தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தவைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x