

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் முதல்கட்ட தேர்தல் நடக்கும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு டிச.27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப் பட்டது. இந்த தேர்தல் மூலம் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சிஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சிஉறுப்பினர் பதவிகளுக்கு கட்சிஅடிப்படையில் தேர்தல் நடத்தப் படுகிறது.
தேர்தலில் போட்டியிட 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனையின்போது 3,643 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 48,891 வேட்பாளர்கள் மனுவை திரும்பப்பெற்ற நிலையில், 18,570 பதவி களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 2 லட்சத்து 31,890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நாளை (26-ம் தேதி) காலை தேர்தல் அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் இதர பொருட்களுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
27-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை5 மணி வரை நடக்கிறது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
27 மாவட்டங்களில் பொது விடுமுறை
தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாநில தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் 27-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் உள்ளாட்சிப் பகுதிகள் மற்றும் டிச.30-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு செலாவணி முறிச்சட்டப்படி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, இப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.