Published : 24 Dec 2019 08:56 PM
Last Updated : 24 Dec 2019 08:56 PM

கஸ்டமர்களைக் கஷ்டப்படுத்தும் தனியார் நிதி நிறுவனங்கள்; ரிசர்வ் வங்கி, அரசுக்கு நோட்டீஸ்: பொதுநல வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்களிடமிருந்து தங்க நகைக் கடனுக்காக அதிக வட்டியை வசூலிக்கவும், கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களின் தங்க நகைகளை ஏலம் விடுவதற்கும் தனியார் நிதி நிறுவனத்துக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்குப் பதில் அளிக்க ரிசர்வ் வங்கிக்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ஜோசப் சகாயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அவரின் மனுவில் கூறியுள்ளதாவது:

“தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நகைக் கடன் தொழிலில் ஜொலிக்காத நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் எல்லாம் தங்க நகைக் கடன் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. பொதுமக்களைக் கவரும்விதமாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவதால் பெரும்பாலானவர்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடுகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் தனியார் நிதி நிறுவனங்கள் வந்தாலும், தங்க நகைக் கடன் வழங்குவதிலும், விருப்பம் போல் வட்டி நிர்ணயம் செய்வதும், மீட்கப்படாத நகைகளை ஏலம் விடுவதிலும் எந்த விதிகளையும் பின்பற்றுவது இல்லை.

அடமானம் வைக்கப்படும் நகைகள் திருப்பப்படவில்லை என்றால், அவற்றைப் பொது ஏலம் விடும் ஆர்பிஐ விதிமுறைகளை மதிக்காததால், அவசரத் தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைக்கும் நடுத்தர மக்கள், ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்களிடம் இருந்து தங்க நகைக் கடனுக்காக அதிக வட்டி வசூலிக்கவும், கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களின் தங்க நகைகளை ஏலம் விடுவதற்கும் தனியார் நிதி நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண் டும்.

தனியார் நிறுவனங்கள் தங்க நகைக் கடன் வழங்குவதை ஒழுங்குபடுத்தவும், மேற்பார்வையிடவும் தமிழக அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும்”.

இவ்வாறு ஜோசப் சகாயராஜ் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர், தமிழக நிதித்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமர்வு பிப்ரவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x