Published : 24 Dec 2019 08:17 PM
Last Updated : 24 Dec 2019 08:17 PM

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கிய கல்லூரி மாணவர்; தீவிர வாக்குச் சேகரிப்பு

வாக்குச் சேகரிப்பில் கல்லூரி மாணவர் நாகார்ஜுன்.

கோவை

கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கல்லூரி மாணவர் நாகார்ஜுன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கோவை நீலாம்பூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் எஸ்.நாகார்ஜுன் (21). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்றுள்ள இவர், தற்போது தனியார் கல்லூரியில் எம்.ஏ. இதழியல் இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில், சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சிமன்ற 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நாகார்ஜுன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவரது தந்தை செந்தில்குமார் மில் ஊழியர். தாயார் தனியார் பள்ளி ஆசிரியை.

21 வயது 6 மாதங்கள் நிரம்பிய நாகார்ஜுன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறுகையில், ''இளைஞர்களுக்கு சமூகப் பார்வை அவசியமானது. கடந்த ஓராண்டாக, `உடனடி தேவை உள்ளாட்சித் தேர்தல்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை தயாரித்து வருகிறேன். இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் குறித்து அறிந்துகொண்டேன். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

நான் வெற்றி பெற்றால், எனது வார்டில் உள்ள அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்க முயல்வேன். அனைத்துத் தெருக்களிலும் சுகாதாரத்தை மேம்படுத்துவேன்'' என்றார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 30-ம் தேதியும் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x