

மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் சரிவு தொடங்கிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர் சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோர் இன்று வாக்கு சேகரித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர்கள், சிவகளை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றவாறு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. நாட்டு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டுகின்றன.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஜார்கண்டில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். பாஜகவுக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் ஆதரவு தருமாறு மக்களிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால், ஜார்கண்ட் மக்கள் அவர்களது வேண்டுகோளை முற்றிலும் நிராகரித்துவிட்டனர்.
பாஜகவின் கொள்கைகள் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் மக்களின் மனநிலையை முழுமையாக மாற்றியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் அவரது அரசு நாட்டின் அரசியல் அமைப்பையே சீர்குலைத்து வருகிறது. மேலும், மக்களின் எண்ணங்களுக்கு மாறாக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இவைகள் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெளிவாக எதிரொலித்துள்ளது.
பிரதமர் மோடி அரசின் நாட்கள் தற்போது எண்ணப்படுகின்றன. மத்திய பாஜக அரசின் சரிவு தொடங்கிவிட்டது.
பாஜக அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை வரும் நாட்களில் மேலும் கடுமையாக மாறும். இன்று மாணவர்களும், இளைஞர்களும் தெருவுக்கு வந்து பாஜக அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். ஏராளமான மக்களும் இணைந்து போராடுகின்றனர்.
இந்த போராட்டம் மேலும் அதிகமாகும். இதன் மூலம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆட்சியை நடத்தவில்லை என்ற மக்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள்" என்றார்.