

‘மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் கூட்டணியாக மாறுமா என்பதை அறிய மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித் தார்.
தோழர் ஜீவா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜீவா படத்துக்கு முத்தரசன் மரியாதை செலுத் தினார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
சென்னை வந்த பிரதமர் மோடி சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில் உள்ள நிலையில் ஜெயலலிதாவை அவரது வீட் டுக்குச் சென்று பிரதமர் சந்தித்தது சரியல்ல. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரது கருத்துக்கு ஜனநாயகரீதியில் அறிக்கை விட்டிருக்கலாம். அதைவிடுத்து, திட்டமிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் மக்கள் பொறுப்பில் உள்ள பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபடுவது சரி யான அணுகுமுறை கிடையாது. இந்த தொடர் போராட்டங்களை அதிமுகவினர் கைவிட வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணி தேர்தல் கூட்டணியாக மாறுமா? அதன் அடுத்தகட்ட பங்களிப்பு என்ன என்பது குறித்து மதிமுக சார்பில் திருப்பூரில் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். அவரது முடிவை அறிய காத்திருக்கிறோம். மக்கள் நலக் கூட்டணிக்கு பல அரசியல் கட்சிகள் வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகம், மதுவினால் சீரழிந்து விட்டது என்பதை மறுக்க முடியாது. ஆகஸ்ட் 15-ல் மதுவிலக்கு குறித்து முதல்வர் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. வரும் 24-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அந்த கோரிக் கையை வலியுறுத்துவார்கள். மது விலக்குப் போராட்டத்தில் ஈடுபட் டவர்கள் மீது போடப்பட்ட வழக்கு களை அரசு திரும்பப் பெற வேண் டும் என்றார்.