ரூ.1 லட்சம் மதிப்பில் சரக்கு ஆட்டோவில் நடமாடும் வீடு: பட்டதாரி இளைஞர் சாதனை

சரக்கு ஆட்டோவில் வீடு
சரக்கு ஆட்டோவில் வீடு
Updated on
2 min read

நாமக்கல் மாவட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சரக்கு ஆட்டோவில் நடமாடும் வீடு வடிவமைத்து, பட்டதாரி இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவரின் புதிய முயற்சி, உறவினர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரைச் சேர்ந்த 23 வயதான அருண்பிரபு தான் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர். இது தொடர்பாக அவர் கூறியதாவசது:

"எனது பெற்றோர் குணசேகரன், கோமதி. தந்தை எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். தங்கை சட்டக் கல்லுாரியில் படித்து வருகிறார். 2013 -18 வரை, பி.ஆர்க். படித்து முடித்தேன்.

நடமாடும் வீடாக மாறிய சரக்கு ஆட்டோ
நடமாடும் வீடாக மாறிய சரக்கு ஆட்டோ

தற்போது, 'பில் போர்ட்ஸ்' என்ற நிறுவனம் நடத்தி வருகிறேன். படிக்கின்ற காலத்தில், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதையடுத்து நாடோடிகளாக வாழும் நரிக்குறவர்கள் மற்றும் பெரு நகரங்களில் இட நெருக்கடியில் வசித்து வரும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, 'நடமாடும் வீடு' தயாரிக்கத் திட்டமிட்டேன்.

அதையடுத்து, நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில், 37 ஆயிரம் ரூபாய் செலவில், சரக்கு ஆட்டோவை விலைக்கு வாங்கினேன். அவற்றின் 'பாடி'யை அகற்றி, பழைய பேருந்து 'பாடி'யின் பாகங்களைப் பயன்படுத்தி, மறு சுழற்சி முறையில், வீடு கட்டும் பணியைத் தொடங்கினேன்.

அந்த வீட்டில், படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, ரெடிமேட் கழிப்பறை, மொட்டை மாடி, சிட் அவுட் போன்றவற்றை டிசைன் செய்து, ஒவ்வொன்றாக வடிவமைத்து, வீடு கட்டும் பணியை மேற்கொண்டேன்.

படுக்கை அறை
படுக்கை அறை

மேலும், வண்டியின் மேல், குடிநீர் டேங்க் அமைத்து, ஹைட்ராலிக் பம்ப் மூலம் தண்ணீர் ஏற்றும் முறையும் வடிவமைக்கப்பட்டது. நடமாடும் வீட்டில் படுத்து உறங்கும்போது, வெப்பம் தாக்காமல் இருக்கவும், காற்று சுழற்சி முறையில் சீராக வந்து செல்லவும், ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் வீடு, நீளம், அகலம், உயரம் என, அனைத்தும் ஆறு அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நாம் இறந்து போனால், ஆறு அடியில்தான் புதைக்கப்படுகிறோம். அவற்றைக் கருத்தில் கொண்டே, ஆறு அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படுக்கை அறை
படுக்கை அறை

நடமாடும் வீட்டின் மேல் உள்ள நடைமேடை, நாற்காலி போட்டு அமர்ந்து கொள்வதுடன், படுத்துக்கொண்டும் ஓய்வு எடுக்கலாம். அதேபோல், 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வெளிச்சத்துக்காக, 600 வாட்ஸ் அளவுக்கு சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி, மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்தின் பழைய பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இப்பணி, கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் வரை, ஐந்து மாதத்தில் முடிக்கப்பட்டது".

இவ்வாறு அருண்பிரபு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in