திமுக பேரணி: 5,000 பேர் தான் வந்திருந்தனர்; இதைவிட அசிங்கம் அக்கட்சிக்கு வேறில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

திமுகவின் பேரணிக்கு 5,000 பேர் மட்டும் கூடியது அக்கட்சிக்கு பெரிய அவமானம் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை, தங்கசாலையில் இன்று (டிச.24) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"விஷ விதையை தூவி, வன்முறையை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் இந்த பேரணிக்கு அறைகூவல் விடுத்தார். அந்த அறைகூவல் 'காக்கா கூவல்' ஆகிவிட்டது. இதனை தமிழக மக்கள் திமுகவுக்கு உணர்த்தியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் சாதி, மத, இன பேதமில்லை, எந்த பிரச்சினையும் இல்லை.

இந்த பிரச்சினையில் ஸ்டாலின் அடுத்து ஐநா சபையை அழைப்பார். தமிழ்நாட்டில் போரிடுங்கள் என அவர்களை ஸ்டாலின் அழைப்பார்.

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் திமுக பேரணியில் வன்முறை நிகழவில்லை அதற்காக யாரையும் நாங்கள் கைது செய்யவில்லை. இது ஜனநாயக நாடு. சுதந்திரமாக கருத்து தெரிவிக்கலாம். திமுகவுக்கு வன்முறைய ஏற்படுத்துவது தான் எண்ணம்.

பேரணியை கேமரா மூலம் கண்காணிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், மாட்டி விடுவோம் என்ற பயத்தால் திமுக பேரணியில் வன்முறை நிகழவில்லை. எந்த வன்முறைக்கு அவர்கள் வித்திட்டிருந்தாலும் உடனேயே வெளியில் தெரிந்திருக்கும். வன்முறை கலாச்சாரத்தை திமுக தூண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே எல்லா இடங்களிலும் கேமரா வைத்தோம்.

எங்களுக்கு திறந்த மனது, ஒளிவுமறைவில்லை. நாளை நீதிமன்றம் கேட்டால் ட்ரோன், கேமராக்கள் மூலம் பதிவான வீடியோ பதிவுகளை அளிப்போம். அதனால் தான் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அமைதியாக கூடி சென்றனர். 108 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்து 5,000 பேர் தான் வந்திருக்கின்றனர். இதைவிட பெரிய அசிங்கம் திமுகவுக்கு இருக்காது. இது திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தோல்வி" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in