

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜன.6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று (டிச.24) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தை, 2020 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6-ம் தேதி, திங்கள்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசமைப்பு, பிரிவு 176(1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் சென்னை, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் அன்றைய தினமே உரை நிகழ்த்த உள்ளார்" என அறிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும், ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது ஜனவரி 6-ம் தேதியே அறிவிக்கப்படும்.