தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினெட்டாக உள்ளது: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க ஸ்டாலின் வேண்டுகோள்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினெட்டாக உள்ளது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.24) உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கக் கோரி தமது முகநூல் - ட்விட்டர் - யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

"எப்போதோ நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இப்போதுதான் நடக்கவிருக்கிறது. 2016-ல் நடக்க வேண்டிய தேர்தலை 3 ஆண்டுகளாக அதிமுக அரசு தள்ளிப்போட்டது. மக்களை சந்திக்க அதிமுகவுக்கு பயம்.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மக்கள் அவர்களிடம் குறைகளை சொல்லி அவ்வப்போது அவை தீர்க்கப்பட்டிருக்கும்.

ஆனால், இப்போது மக்களின் குறைகள் கணக்கிலடங்காதவை. கேட்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் நானும், திமுக நிர்வாகிகளும் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டோம். குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, முறையான முதியோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி, 100 நாள் வேலைவாய்ப்பு, இப்படி மிகவும் எளிதாகத் தீர்க்கக்கூடிய சாதாரணமான குறைகளைத்தான் மக்கள் தெரிவித்தனர். உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் இதில் 60% குறைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.

தேர்தல் முன்பே நடத்தப்படாததற்கு இரண்டு காரணங்கள் தான். தேர்தல் நடந்தால் திமுக வென்றுவிடும் என்கிற பயம் முதல் காரணம். உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்துவிட்டால் வழக்கம் போல கொள்ளையடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம். ஊழல், லஞ்சம், டெங்கு காய்ச்சல், காசநோய், என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அதிலெல்லாம் இந்த ஆட்சி முதலிடத்தில் உள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினட்டாக உள்ளது. இது இந்தியாவுக்கே அவமானம். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்குத்தான் இப்போதைய உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நாளை நல்லாட்சி அமைய திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்"

இவ்வாறு அந்த காணொலியில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in