

தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு, காற்று மாசு ஏற்படுவதை தடுத்திட மரக்கன்றுகளை நட வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மணிகண்டன் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரம் மேற் கொண்டுள்ளார்.
மணிகண்டன், சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இடது காலை அகற்றும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, காற்று மாசு, மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள மணிகண்டன், நேற்று சேலம் வந்தார்.
கடந்த 13-ம் தேதி தொடங்கிய பயணத்தில் தினமும் 60 கிலோ மீட்டர் வரை செல்கிறார். மரக்கன்றுகளை நடுமாறும், மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருகிறார். வரும் ஜனவரி 1-ம் தேதி சென்னையில் பயணத்தை முடிக்க மணிகண்டன் திட்டமிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி இளைஞரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.