

நுகர்வோரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி தேசிய நுகர்வோர் உரிமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாடு, பொருட்களின் தயாரிப்பில் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதில், நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்கும் குறிப்பிட்ட பங்கு இருந்து வருகிறது. விழிப்புணர்வு அதிகமாகி வருவதால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் செயல்படுகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்குகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான இந்த நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்டோரே நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற வழிவகை உள்ளது.
இதுதொடர்பாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் கூறும்போது, ‘நிவாரணம் கோரும் தொகை ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் வழக்கு தொடரலாம். நிவாரணத் தொகை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள வழக்குகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்குகள், மாநில நுகர்வோர் ஆணையத்தால் விசாரிக்கப்படும்.
எடை குறைப்பு, மோசமான சேவை, ஒப்பந்த வரையறைகளில் ஏமாற்றுதல் அல்லது மீறுதல், அதிகப்படியான சில்லரை விற்பனை விலையைவிட (எம்.ஆர்.பி.) கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பது, மருத்துவ சேவையில் குறைபாடு, பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்டவற்றுக்கு மேற்கண்ட நீதிமன்றங்களில் நிவாரணம் பெறலாம்.
நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், சுமார் 80 சதவீதத்துக்கும் மேலான வழக்குகளில் நுகர்வோருக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. தகுந்த ஆதாரங்கள், வாதங்கள் இல்லாத வழக்குகள்தான் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ரூ.5 லட்சம் வரை இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு, நீதிமன்ற கட்டணம் ஏதும் பெறப்படுவதில்லை. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு ரூ.200, ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு ரூ.400 நீதிமன்ற கட்டணமாக பெறப்படுகிறது.
கட்டாயம் ரசீது வேண்டும்
பொருட்களையோ, சேவையையோ பெறும் நுகர்வோர், யாரிடம் இருந்து என்ன பொருட்களை வாங்குகிறோம் அல்லது சேவையை பெறுகிறோம் என்பதற்கான ரசீதை, ஆதாரத்தை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும். அப்போதுதான், ஏதேனும் குறைபாடெனில், வழக்கு தொடரும்போது அதற்கு ஆதரமாக ரசீதை ஓர் ஆவணமாக சமர்ப்பிக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிடலாம். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லையெனில், நுகர்வோர் குறைதீர் மன்றத்தை நாடலாம். உணவுப் பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு எனில், முதலில் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு நுகர்வோர் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள், உணவு மாதிரியை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்புவார்கள். அந்த அறிக்கையில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை வைத்தும் நுகர்வோர் வழக்கு தொடரலாம்.
மனுதாரரே வாதாடலாம்
பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மனு தாக்கல் செய்யலாம். மேலும், வழக்கறிஞர் இன்றி மனுதாக்கல் செய்தவரே நேரடியாக தமிழிலேயே வாதாடலாம் அல்லது வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம். வாதங்கள் முடிந்து இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், எதிர்மனுதாரர் இழப்பீடு வழங்கவில்லை எனில், உத்தரவை நிறைவேற்றும் மனுவை பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்யலாம். அதன்பிறகு, சம்பந்தப்பட்டவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிடும். பெரும்பாலும், இந்த நிலைக்கு முன்பாக வழக்குகளுக்கு தீர்வு கிடைத்துவிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.