

இந்து தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, குமரி மாவட்டத்தில் 3 பேர் வீடுகளில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அவர்களின் லேப்டாப்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்போராட்டங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளதாக, மத்திய உளவுத் துறை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளிகள் குறித்தபட்டியலை போலீஸார் தயாரித்தனர். அதில், குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் (25), கோட்டாறு பகுதியைச் சேர்ந்த செய்யது அலி நவாஸ் (25) உள்ளிட்ட 4 பேர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீதும் இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக வழக்குகள் உள்ளன.
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை
இவர்கள் கடந்த 2 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. காவல் நிலையங்களில் ஆஜராகி கையெழுத்து போடவில்லை என்பது தெரியவந்தது. இவர்களைப் பிடிக்க தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் உள்ளஅனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இவர்கள் 4 பேரின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
செல்போன், லேப்டாப் பறிமுதல்
இவர்களின் வீடுகளில் தேசிய சிறப்பு புலனாய்வு போலீஸார் நேற்று காலை சோதனை நடத்தினர். கோட்டாறு அருகே இளங்கடையில் உள்ள செய்யது அலி நவாஸ் (25) வீட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி சுப்பையா மற்றும் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
வீட்டில் நவாஸ் இல்லை. அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அவரது லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரது நண்பரான தவ்பீக் வீட்டிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (25) வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு,2 செல்போன், ஒரு லேப்டாப் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
இச்சோதனையின்போது அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.