Published : 24 Dec 2019 08:09 AM
Last Updated : 24 Dec 2019 08:09 AM

மெட்ரோ ரயில் திட்டம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை - பரங்கிமலையில் இருந்து மடிப்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பரங்கிமலையில் இருந்து ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட் ரோடு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எல்காட், சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரியை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

இதற்காக மேற்கண்ட பகுதிகளில் மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்தப்படுவது குறித்து நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுதொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அப்போது அதிகாரிகள் பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இக்கூட்டத்தில் பங்கேற்ற மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘எந்தெந்த சர்வே எண்ணில், எவ்வளவு நிலம் எடுக்கப்படும் என்பதை, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெளிவாகக் கூறவில்லை. தற்போதுதான் மேம்பாலம் அமைக்கவும், சாலை விரிவாக்கத்துக்கும் எங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடம் போக மீதி இடத்தில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். தற்போது மீண்டும் நிலம் எடுத்தால் எங்களுக்கு அங்கு நிலமே இல்லாமல் போய்விடும், இதனால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்’’ என்றனர்.

மேலும், “மெட்ரோ ரயில் நிறுவனத்தை, நில உரிமையாளர்கள் நேரடியாக அணுகினால் யாரும் முறையான பதில் அளிப்பதில்லை” எனவும் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிகைகளை மனுவாக அதிகாரிகளிடம் வழங்கினர். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x