

தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரம் ஊராட்சித் தலைவர்க்கு போட்டியிடும் எம்.வள்ளி தனக்கு ஒதுக்கப்பட்ட கைஉருளைச் சின்னத்தை வாக்காளர்கள் மனதில் பதிய வைப்பதற்காக அதன் மாதிரியை உருவாக்கி உள்ளார். தினமும் இதனை உருட்டிக் கொண்டு வாக்கு சேகரிப்பது வாக்காளர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. இதற்காக சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் முதலே கிராமங்களில் பிரசாரம் களை கட்டி வருகிறது.
கிராமத்தில் பாமரர்கள் அதிகம் இருப்பதால் வேட்பாளர்களின் பெயர்களை முன்னுறுத்துவதை விட சின்னங்களை முன்னிலைப்படுத்துவதில் பலரும் முனைப்புடன் உள்ளனர். இதற்காக சீப்பு, பூட்டு, கத்தரிக்காய் போன்றவற்றை பிரசார நோட்டீஸ்களில் பெரியதாக அச்சிட்டு ஓட்டு கேட்டு வருகின்றனர். பெயரை விட சின்னங்களை அழுத்தமாக வேட்பாளர்களிடம் எடுத்துக் கூறியும் வருகின்றனர்.
இந்த வகையில் கைஉருளை சின்னமும் சுயேட்சைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தின் உருவத்தை வாக்காளர்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் ஆண்டிபட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எம்.வள்ளி வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக கைஉருளையின் மாதிரி உருவத்தை தயார் செய்து தினமும் இதனை உருட்டிக் கொண்டு ஊராட்சியின் பல பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். கையடக்க சின்னங்களைப் பெற்ற வேட்பாளர்கள் எளிதில் அதனை தூக்கிச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் இவரின் பிரசாரம் வித்தியாசமாக இருக்கிறது.
இது குறித்து இவர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு சின்னப்பட்டியலில் சேர்த்துள்ளது. பழக்கத்தில் இருந்து மிகவும் குறைந்துவிட்ட பொருள் இது.
முதலில் வெறுமனே சின்னத்தைக் கூறி பிரசாரம் செய்த போது பலரும் சப்பாத்திக்கட்டை சின்னமா என்றார்கள். சிலர் அம்மிக்குழவியா என்றார்கள். எனவே சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க இவற்றை செய்து மக்கள் முன்பு உருட்டிக் கொண்டு செல்கிறோம்.
ரூ.3ஆயிரம் செலவில் பிளைவுட் மூலம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை மிகவும் குறைவு. இவற்றை தள்ளிக்கொண்டே செல்வதால் இந்த சின்னம் மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்டது. பலரும் ஆர்வமாக எங்களைக் கவனிக்கின்றனர்.
தினமும் 5கிமீ.க்கு மேல் இதனை உருட்டிக்கொண்டு பல இடங்களுக்கும் செல்கிறோம். இவற்றைத் தள்ளுவதற்கு எங்கள் ஆதரவாளர்கள் பலரும் போட்டியிடுவர். ஆர்வக் கோளாறில் யாராவது உருட்டிச் சென்று விடுவார்கள் என்பதால் பிரசாரம் முடிந்ததும் இதனை வீட்டிற்குள் வைத்து பத்திரப்படுத்தி விடுகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
சின்னத்தை பிரபலப்படுத்த இவர் மேற்கொண்டுள்ள முயற்சி வாக்காளர்களின் கவனத்தை வெகுவாய் கவர்ந்துள்ளது.