Published : 23 Dec 2019 07:38 PM
Last Updated : 23 Dec 2019 07:38 PM

கிரகணத்தின்போது சூரியனில் இருந்து மர்மக்கதிரும் வராது மாற்றமும் ஏற்படாது; சிறுவர்கள், கர்ப்பிணிகள் பார்க்கலாம்: விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கம்

சூரிய கிரகணத்தை சிறுவர்கள் முதல் கர்ப்பிணிகள் வரை பார்க்கலாம். சூரியகிர கணத்தின் போது சூரியனில் எந்த மாற்றமும் ஏற்படாது, அதிலிருந்து மர்மக் கதிரும் வீசாது என்று டெல்லி விஞ்ஞான் பிரசார் முதன்மை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

டிசம்பர் 26-ம் தேதி வரும் அபூர்வ சூரிய கிரகணம் தமிழகத்தின் கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் முழுமையாகத் தெரியும்

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டிசம்பர் 26-ம் தேதி, தமிழகத்தில் அதிசய சூரிய கிரகணம் காலை சுமார் 8:07க்கு துவங்கும் கிரகணம் 11:16 வரை நிகழ்கிறது. அப்போது கோவை, ஊட்டி, திருப்பூர் போன்ற இடங்களில் வானில் இந்த அற்புதக்காட்சியின் முழுவளைவு காலை 9:31 முதல் 9:33 வரை தெரியும்.

மேலும், கோவை, ஊட்டி, கரூர், திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற பகுதிகளில் முழுமையாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் பகுதியாகவும் தெரியும். சில நிமிடங்கள் வரை தீ வளையம் போல சூரியன் அற்புதமாகக் காட்சி தரும். சுமார் இரண்டு நிமிடம்வரை நெருப்பு வளையம் போல தென்படும்.

மதுரையில் சூரிய கிரகணம் வளைவுகாட்சி 93 சதவீதம் தெரியும். இந்த நிகழ்வில் நெருப்பு வளையம் போல சூரியன் காட்சி தரும். சூரிய ஒளியால் ஏற்படும் ஒரு வான் பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். எடுத்துக்காட்டாக, சூரியனை நிலவு மறைத்து, அதன் நிழல், பூமியில் விழும்போது அது சூரிய கிரகணம். பூமியின் நிழல், முழுநிலவின் மீது விழுந்து, அது மறைவது சந்திர கிரகணம். கிரகணம்.

இவை இயற்கை நிகழ்வு. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்கிறது. அதனைக் கூர்ந்து கவனித்த நம் முன்னோர்கள், வானவியற் கண்ணோட்டத்தோடு, அதன் காலத்தை கிட்டத்தட்டச் சரியாகச் சொன்னார்கள். இன்றைய அறிவியல் மேலும் கூர்மையாகக் கணிக்கிறது. கோள்களின் இயக்கங்கள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை மிகத் துல்லியமாக ஆராய்கிறது. நிலவு, பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. அதேபோல, பூமியும் சூரியனை நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. எனவே நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு எப்போதும் ஒரே அளவில் இருக்காது. சேய்மை நிலையில் உள்ள போது, நிலவின் தொலைவு கூடியும், அண்மை நிலையில் உள்ள போது, தொலைவு குறைந்தும் காணப்படும்.

வருகின்ற டிசம்பர் 26 அன்று, பூமி சூரியனுக்கு அருகாமையில் இருக்கும். எனவே சூரியனின் தோற்றம் சற்று பெரியதாகத் தெரியும். இதே காலகட்டத்தில், நிலவு, பூமியிலிருந்து தொலைதூரத்தில் அமையும். அதனால், அதன் தோற்றம், சற்றே சிறியதாகத் தெரியும். இதன் காரணமாக, தோற்றத்தின் அளவில் சற்று பெரியதாகக் காட்சி தரும் சூரியனை, தோற்றத்தின் அளவில் சிறியதாக இருக்கும் நிலவு, முழுதாக மறைக்க முடியாது. சூரியனின் விளிம்பு, நிலவின் வட்டத்தை தாண்டி அமையும். எனவே தான், அன்றைக்கு வானில் நெருப்பு வளையம் போலத் தென்பட்டு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இதையே வளைய சூரியகிரகணம் அல்லது கங்கண சூரியகிரகணம் என அழைக்கிறோம்.

சூரியனை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. நுண்துளை கேமரா கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரியனின் பிம்பத்தை திரையில் வீழ்த்தி, காண்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை. மேலும் சூரிய ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் சூரியக்கண்ணாடிகள் பயன்படுத்தலாம்.

கிரகணத்தின் போது ஏதோ மர்மக் கதிர்கள் வருகின்றன. எனவே தான் சூரிய கிரகணத்தைக் காணக்கூடாது. வெளியே வரக்கூடாது. சாப்பிடக் கூடாது எனப் பலரும் தவறாக கருதுகின்றனர். அப்படியெலாம் ஏதும் இல்லை. கிரகணம் என்பது நிழல் தான். மரத்தின் நிழலில் இருப்பதுவும், நிலவின் நிழலில் இருப்பதும் ஒன்றுதான். கிரகணத்தின் போது சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படுவது இல்லை. எனவே எந்தவித மர்மக் கதிர்களும் வருவது இல்லை. அதனால், சிறியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைத்து மக்களையும், இந்த அரிய நிகழ்வைக் காணலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் ப.ஸ்ரீகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் முனைவர் சு.தினகரன், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.ராஜேஷ், மாவட்டச் செயலாளர் கு.மலர்ச்செல்வி, கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் அ.சத்தியமாணிக்கம் மற்றும் பலர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

மதுரையில் எந்தெந்த இடங்களில் பார்க்கலாம்?

மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சிம்மக்கல் தைக்கால் பாலம், ராஜாமில் பாலம் (எல்.ஐ.சி. அலுவலகம் அருகில்), பழங்காநத்தம் ரவுண்டானா, ஆரப்பாளையம் ரவுண்டானா, வண்டியூர் பூங்கா, கலிலியோ அறிவியல் மையம் சார்பில் தெப்பக்குளம், ஈடன் சைன்ஸ் சென்டர் சார்பில் முத்துப்பட்டி மற்றும் மேலூர், திருமங்கலத்தில் துளிர் அறிவியல் மையம், டோல்கேட், மம்சாபுரம், தங்களாச்சேரி ஆகிய இடங்களில் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல், கிரகணம் பார்ப்பதற்கான சூரியக் கண்ணாடிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலும், கலிலியோ அறிவியல் மையத்தின் சார்பிலும் வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x